விஞ்சை மகளிரின்நிலை

அறுசீர்விருத்தம்

5026.

வளர்ந்தகாதலர் மகரிகை நெடுமுடி
      அரக்கனைவரக் காணார்,
தளர்ந்தசிந்தைதம் இடையினும் நுடங்கிட,
      உயிரொடுதடுமாறி,
களந்தவா நெடுங்ககருவியில், கைகளில்
     செயிரியர்கலைக்கண்ணால்,
அளந்த பாடல்வெவ் அரவுதம் செவிபுக
     அலமரல்உறுகின்றார்.

     வளர்ந்த காதலர்- மேலும்மேலும் பெருகிய காதலுடைய வித்தியாதர
மகளிர்; மகரிகை நெடுமுடி - மகரவடிவாக அமைந்த கிரீடத்தை அணிந்த;
அரக்கனை - இராவணன்; வரக் காணார் - தம்பால் வருதலைப்
பெறாதவராய்; தளர்ந்த சிந்தை - தளர்ச்சியடைந்த சிந்தையானது; தம்
இடையினும் -
தம்முடைய இடையை விட (அதிகமாக); நுடங்கிட - நடுக்கம்
அடைய; உயிரொடு - உயிருடன்; தடுமாறி - கலக்கம் அடைந்து; செயிரியர்

- பாணர்கள்; களந்தவா - கண்டத்தோடு மாறுபடாத; நெடுங்கருவியில் -
நீண்ட இசைக்கருவிகளாலும்; கைகளில் - கைகளாலும்; கலைக்கண்ணால் -
நூல்களாகிய கண்களைக் கொண்டு; அளந்த பாடல் - வரையறுக்கப் பெற்ற
பாடல்களாகிய; வெவ் அரவு - கொடிய பாம்பு; தம் செவி புக - தம்முடைய
செவியில் நுழைய; அலமரல் உறுகின்றார் - மனம் கலங்குகின்றனர்.

     செயிரியர் -பாணர்கள். பிரிந்தார்க்கு இசை பாம்பு போல் வருத்தும்.
வெதும்பும் மாதர் தம் இன் செவி பையரா நுழைகின்ற போன்றன பண்களின்
நெடு பாடலே, என்று கைகேசி சூழ்வினையில் பேசப்பட்டது (கைகேசி 58)
அளந்த பாடல் - தாளத்தால் வரையறுக்கப்பெற்ற பாடல். கலைக்கண்
உடையவரே வரையறுக்கவல்லார் - பஞ்ச மரபு, 'தென்றல் வடிவும், சிவனார்
திருவடிவும் ..... வேத வடிவும் காணஇல் ..... தாளம் காணலாம், என்று பேசிற்று
(தாளவியல்) மகரிகை என்பது சுறா வடிவமாகக் கிரீடத்தில் அமையும்
ஓருறுப்பு. இவ்விருத்தம் மா - விளம் - விளம் - விளம் - விளம் -  காய்
என்னும் சீர்களைப் பெற்றுவரும். இத்தகைய பாடல்களின் தொகை இந்நூலில்
48 (மணிமலர் 76).                                           (192)