அனுமன்மண்டோதரியைக் காணல் 5029. | ஆயவிஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு -இரண்டு அமைகோடித் தூய மாளிகைநெடுந்தெருந் துருவிப் போய், தொலைவில்மூன்று உலகிற்கும் நாயகன்பெருங்கோயிலை நண்ணுவான் கண்டனன்,நளிர் திங்கள் மாய நந்தியவாள்முகத் தொருதனி மயன்மகள்உறைமாடம். |
ஆய - அப்படிப்பட்ட; விஞ்சையர் மடந்தையர் - வித்தியாதரப் பெண்கள்; அமை ஆறு இரண்டு கோடி - தங்கியிருக்கும் பன்னிரண்டு கோடி எண்ணுள்ள; தூய - தூய்மையான; மாளிகை - மாளிகைகளைப் பெற்ற; நெடுந் தெரு - நீண்ட தெருக்களை; துருவிப் போய் - தேடிச் சென்று; தொலைவில் - அழிதல் இல்லாத; மூன்று உலகிற்கும் நாயகன் - மூன்று உலகிற்கும் தலைவனான இராவணனின்; பெருங்கோயிலை - பெரிய அரண்மனையை; நண்ணுவான் - அடையும் அனுமன் (இடையில்); நளிர்திங்கள் - குளிர்ந்த சந்திரனும்; மாய - ஒளி மழுங்க; நந்திய - விளங்கிய; வாண் முகத்து - ஒளியையுடைய முகத்தைப் பெற்ற; ஒரு தனி - ஒப்பற்ற; மயன்மகள் - மயனின் புதல்வியாகிய மண்டோதரி; உறைமாடம் - தங்கியிருக்கும் மாளிகையை; கண்டனன் - பார்த்தான். மயன் -அசுரர்களின் சிற்பி. மயன்மகளை இராவணன் திருமணம் செய்த வரலாறு உத்தரகாண்டம் இராவணன் பிறப்புப் படலம் பேசும்.திங்கள் மாய் - திங்களின் ஒளி குறைய. மாய்தல் - ஒளி குறைதல். பகல் மாய என்னும் நெய்தற் கலித் (26-39(தொடர்க்கு இனியர் பகற்காலத்தின் 'ஒளி மழுங்க' என்று உரை வகுத்தார். (195) |