5031.

அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி
     ஆதியர்,மலர்க்காமன்
சரம்பெய்தூணிபோல்
தளிர்அடி தாம்தொடச்
     சாமரைபணிமாற
கரும்பையும் சுவைகற்பித்த சொல்லியர்
     காமரம்கனியாழின்
நரம்பின்இன்இசை செவிபுக நாசியில்
     கற்பகவிரை நாற.

     காமன் - மன்மதனுடைய;  மலர் சரம் பெய் - மலரம்புகள் இட்டு
வைத்த; தூணி போல் - அம்பறாத் துணி போன்ற; தளிர் அடிதாம் - தளிர்
போன்ற பாதங்களை; அரம்பை .... உருப்பசி ஆதியர் - அரம்பை ....
ஊர்வசி முதலான மகளிர்; தாம் தொட - தம் கரத்தால் வருடவும்;  சாமரை
பணி மாற -
 சாமரை வீசப்பெறவும்; கரும்பையும் - கரும்பையும்;
சுவைகைப்பித்த -
 இனிய சுவை கசப்பு என்று சொல்லும்படியான;
சொல்லியர் -
இனிய சொற்களையுடைய மகளிர்; காமரம் - காமரம் என்னும்
பண்; கனி யாழின் - முதிர்ச்சியடைந்த யாழினுடைய;  நரம்பின் இன் இசை
-
நரம்பின் இனிய ஓசையானது; செவிபுக - செவியிலே நுழையவும்; கற்பக
விரை -
கற்பக மலரின் நறுமணம்; நாசியில் - நாசியின் கண்ணே; நாற -
வெளிப்படவும்.

     தூணி -அம்பறாத்தூணி. மன்மதன் அம்பறாத்தூணி போன்ற
கணைக்கால் என்பது பழையவுரை. அவ்வுரையாசிரியர் தளிரடி என்பதைக்
கணைக்கால் என்று கருதினார். 'சரம் பெய் தூணியின் தளிர் அடி' (கம்ப.
மிகை. 105) கரும்பை என்பதில் உள்ள இரண்டனுருபை நான்கன் உருபாக்குக.
கரும்புக்கு என்பது பொருள். அன்னவரைக் கற்பிப்போம் (பெரிய திருமடல்
36) சுவை கைப்பித்த என்னும் பாடமும் சிறந்ததே. கரும்பையும் கசப்பு
என்னும்படியான சொல் என்று பொருள். சீ காமரம் என்னும் பண்ணின் பெயர்
காமரம் என நின்றது. 'காமரம் முரலும் பாடல்' (கம்ப. 3135) ஆதி கவி,
இராவணனின் மூச்சுக் காற்றில் மாம்பூ, புன்னைப்பூ, மகிழம்பூவின் மணம்
இருப்பதாகப்  பேசினார். கவிச்சக்கரவர்த்தி மண்டோதரியின் மூச்சு மணக்கிறது
என்றார்.                                                (197)