5033. | இன்னதன்மையின், எரிமணி விளக்கங்கள் எழில்கெடப் பொலிகின்ற தன்னது இன்ஒளிதழைப்புறத் துயில்வுறு தையலை,தகைவு இல்லான் 'அன்னள் ஆகியசானகி இவள்'என அயிர்த்து,அகத்து எழு வெந்தீ துன்னும்ஆர்உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர்உழந்து இவை சொன்னான். |
தகைவுஇல்லான் - (பிறரால்) தடுக்கப் பெறாத அனுமன்; இன்னதன்மையின் - இப்படிப்பட்ட சிறப்புடன்; எரிமணி விளக்கங்கள் - ஒளியைப் பெற்ற மாணிக்க விளக்குகளின்; எழில்கெட - பெருமிதம் கெடும்படி; தன்னது - தன்னுடைய; பொலிகின்ற - விளங்குகின்ற; இன் ஒளி - இனிய ஒளியானது; தழைப்புற - செழிப்படையும்படி; துயில்வுறு - உறக்கத்தை மேற் கொண்ட; தையலை - மண்டோதரியை; அன்னள், ஆகிய - அப்படிப்பட்ட; சானகி இவள் என - சீதா பிராட்டி இவளோ என்று; அயிர்த்து - சந்தேகித்து; அகத்து எழு - மனத்தில் தோன்றுகின்ற; வெம் தீ - கொடிய நெருப்பானது; தன் - தன்னுடைய; உடலொடு துன்னும் ஆர் உயிர் - உடலுடன் நெருங்கிய அரிய உயிரை; சுடுவது - சுடக் கூடிய; ஓர் துயர் உழந்து - துன்பத்தால் வருந்தி; இவை சொன்னான் - இவற்றைக் கூறினான். தகைவு - தடைஎரிமணி - பிரகாசத்துடன் கூடிய விளக்கு எரிகொள் செஞ்ஞாயிறு (திவ்ய. திருவிருத்தம் 92) மணி விளக்கின் ஒளி மண்டோதரியின் மேனி ஒளியில் மறைந்தது. இப்பாடலில் மண்டோதரியின் பேரெழில் கூறப்பெற்றது. கற்பு மேம்படுதன்மையினால் 'தன்னது ஒளி தழைப்புறல்' என்று பாராட்டிச் சீதையோ என்ற ஐயத்துக்கும் அவ் ஒளி வட்டமே வழிவகுத்தது என்று புலப்படுத்தினார். (199) |