5035.

மானுயர்த்திரு வடிவினள் அவள்; இவள்
     மாறுகொண்டனள்; கூறின்
தான் இயக்கியோ? தானவர் தையலோ ?
     ஐயுறும் தகைஆனாள் !
கான் உயர்த்ததார் இராமன்மேல் நோக்கிய
     காதல்காரிகையார்க்கு
மீன்உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ ?
     நினைந்ததுமிகை என்றான்.

     அவள் - சீதாப்பிராட்டி;மானுயர் திருவடிவினள் - அழகிய மானிட
மங்கையின் வடிவையுடையவள்; இவள் - இங்கே உறங்கும் இவளோ; மாறு
கொண்டனள் -
(மானிடரினும்) மாறுபட்ட வடிவத்தைப் பெற்றுள்ளாள்; கூறில்
-
(இவற்றை) கூறுபடுத்தி ஆராய்ந்தால்; தான் - இவள்; இயக்கியோ - யட்சப்பெண்ணோ ? ; தானவர் தையலோ - அசுரகுலப் பெண்ணோ?;
ஐயுறும் -
சந்தேகப்படுதற்கேற்ற; தகை ஆனாள் - தன்மையைப்
பெற்றுள்ளாள்;காரிகையார்க்கு - மகளிர்க்கு; கான் உயர்த்த -
மணத்துக்குச் சிறப்பைத்தந்த; தார் - மாலையணிந்த; இராமன் மேல் -
இராமபிரான்பால்; நோக்கிய- சென்ற; காதல் - காதலானது; மீன்
உயர்த்தவன் மருங்குதான் -
மீன்கொடியை உயர்த்திய மன்மதன்
பக்கலில்கூட; மீளுமோ -  திரும்பிவருமோ?; நினைந்தது - (இவள் சீதை
என்று) எண்ணியது; மிகை என்றான்- குற்றம் என்று கருதினான்.

    மானுயர் -மனிதர் - (மானுஷர் - மானுடர் - மானுயர்) மானுயர் இவர்
என மனக் கொண்டாய் எனின் (காட்சி 127) மீன் உயர்த்தவன் -
மன்மதன்.மீனேறுயர்த்த கொடிவேந்தன் (சிந்தாமணி 6) நோக்கிய - சென்ற -
மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின (சித்திரகூட 41). மிகை - குற்றம். (201)