5036.

இலக்கணங்களும் சிலஉள; என்னினும்
     எல்லைசென்று உறுகில்லா
அலக்கண் எய்துவதுஅணியது உண்டு; என்று
                                 எடுத்து
     அறைகுவதுஇவள் யாக்கை;
மலர்க்கருங்குழல் சோர்ந்து, வாய்வெரீஇச், சில
    மாற்றங்கள் பறைகின்றாள்
உலக்கும் இங்குஇவள் கணவனும்; அழிவும் இவ்
     வியன்நகர்க்கு உளது என்றான்.

     சிலஇலக்கணங்களும் உள -  (இவள்பால்) சிலநல்லிலக்கணங்கள்
உள்ளன; என்னினும் - என்றாலும்; இவள் யாக்கை - இவளுடைய உடலின்
அடையாளம்; எல்லை சென்று உறுகில்லா -  முடிவைச் சென்று சேராத;
அலக்கண் -
துன்பத்தை; எய்துவது - அடைவது; அணியது உண்டு -
சமீபத்தில் இருக்கிறது; என்று எடுத்து அறைகுவது - என்று
எடுத்துரைக்கின்றது (இவள்); மலர்க் கருங்குழல் - மலரணிந்த கரிய
கூந்தலானது; சோர்ந்து - அவிழ்ந்து; வாய் வெரீஇ - வாய்குழறி; சில
மாற்றங்கள் -
சில சொற்களை; பறைகின்றாள் - கூறுகின்றாள்; இவள்
கணவனும் -
இவளுடைய கணவனும்; இங்கு உலக்கும் - இங்கே இறப்பான்;
இ வியன் நகர்க்கு -
இந்த பெரிய நகர்க்கு; அழிவும் - நாசமும்; உளது -
இருக்கிறது. என்றான் - என்று கருதினான்.

     பறைகின்றாள் -கூறுகின்றாள். ஏதம் பறைந்து அல்ல செய்து (திவ்ய
திருவாய் 4-6-8) யாக்கை என்றது யாக்கையின் அடையாளங்களை.  (202)