5042.

ஆயபொன்தலத்து ஆய்வளை அரம்பையர்
     ஆயிரர்அணிநின்று
தூய வெண்கவரித்திரள் இயக்கிடச்
     சுழிபடுபசுங்காற்றின்
மீய கற்பகத்தேன்துளி விராயன,
    வீ்ழ்தொறும் நெடுமேனி
தீய, நல்தொடிச்சீதையை நினைதொறும்
     உயிர்த்து,உயிர் தேய்வானை-

     ஆய - அப்படிப்பட்ட; பொன் தலத்து - பொன்மயமான
அரண்மனையில்; ஆய்வளை - சில வளையல்களை அணிந்த; ஆயிர
அரம்பையர் -
ஆயிரக்கணக்கான அரம்பையர்கள்; அணி நின்று -
வரிசையாக இருந்து; தூயவெண் - தூய்மையும் வெண்மையும் பெற்ற;
கவரித்திரள் - கவரிக் கூட்டங்களை;
 இயக்கிட - வீச (அதனாலேஎழுந்த);
சுழிபடு - சுழித்தலைப் பெற்ற; பசுங்காற்றின் - இளங்காற்றால்; மீய -
மேலேயுள்ள; கற்பகத் தேன்துளி - கற்பக மலரில் உள்ள தேன் துளிகள்;
விராயன - மலருடன் கலந்தனவாய்; வீழ்தொறும் - படுந்தோறும்;
நெடுமேனி தீய - பெரிய உடல் வெப்பமடையவும்; நல்தொடி - நல்ல
வளையல் அணிந்த; சீதையை நினைதொறும் - சீதாபிராட்டியை
எண்ணுந்தோறும்; உயிர்த்து - பெருமூச்சுவிட்டு; உயிர்தேய்வானை - உடல்
தேய்கின்றவனை (இராவணனை).

     பொன்தலத்துஅரம்பையர் எனச் சேர்த்து விண்ணுலக மகளிர் என்றே
அனைவரும் பொருள் கொண்டனர். திரிசிரபுரம் மகாவித்துவான் வி.
கோவிந்தபிள்ளை அவர்கள், பொன்தலத்து என்பதற்கு பொன்மயமான இடம்
என்று உரை வகுத்தார்.

     வீயகற்பக -என்று பாடங்கொண்டு, கற்பகவீய எனக்கூட்டி கற்பகமலர்
என்று பொருள் கொண்டவர் பலர். நன்று போலும்.

     அணி நின்று -பக்கத்தில் இருந்து (பிறவுரை) உயிர் என்றது உடலை.
தேய்வது அதுவாதலின். உயிர் முன்புடைப்ப (சிலம்பு - அடைக்கல - 86)
என்னும் தொடரின்கீழே உயிர் என்றது ஆகுபெயரான் உடம்பை என்று
வரைந்தார் அரும்பத உரையார்.                              (208)