5046. | வெள்ளிவெண் சேக்கை வெந்து, பொறிஎழவெதும்பும் மேனி, புள்ளிவெண்மொக்குள் என்னப், பொடித்துவேர் கொதித்துப் பொங்க, கள்அவிழ்மாலைத் தும்பி வண்டொடும்கரிந்து சாம்ப, ஒள்ளிய மாலைதீய, உயிர்க்கின்ற உயிர்ப்பினானை-* |
வெள்ளி வெண்சேக்கை - மிக வெண்மையானபடுக்கை; வெந்து பொறி எழ - (உடல் வெப்பத்தால்) வெந்து தீப்பொறி பறக்கவும்; வெதும்பும் மேனி - வெப்பம் உற்ற மேனியி்ல்; வேர் - வியர்வை; புள்ளி - புள்ளியாய் எழுகின்ற; வெண் மொக்குள் என்ன - வெண்மையான கொப்புளம் போல; பொடித்து - தோன்றி; கொதித்து - வெப்பம் அடைந்து; பொங்க - அதிகரிக்கவும்; அவிழ் - (மாலையிலிருந்து) வெளிப்பட்ட; கள் - கள்ளையுண்டு; மாலை - மயக்கமடைந்து; தும்பி - ஆண்வண்டுகளும்; வண்டொடும் - பெண் வண்டுகளும்; கரிந்து - கருகி; சாம்ப - அழியவும்; ஒள்ளிய - அழகிய; மாலை - மாலையானது; தீய - தீய்ந்து போகவும்; உயி்ர்க்கின்ற - வெளிப்படுகின்ற; உயி்ர்ப்பினானை - பெருமூச்சுடையவனை. மிக்க வெண்மையைஉணர்த்த 'வெள்ளிவெண்' என்று கூறப்பெற்றது. 'வெள்ளி வெண்கடல்' (கம்ப. 6494) வெள்ளி வெண் கோல் (சிந்தாமணி 33) (212) |