5047. | தே இயல்நேமி யானின், சிந்தைமெய்த் திருவின் ஏக பூ இயல் அமளிமேலாப் பொய் உறக்கு உறங்கு வானை, காவியம் கண்ணிதன்பால் கண்ணியகாதல் நீரின் ஆவியைஉயி்ர்ப்பு என்று ஓதும் அம்மிஇட்டு அரைக்கின்றானை-* |
சிந்தை -(தன்) மனமானது; தே இயல் - தெய்வத்தன்மை பெற்ற; நேமியானின் - சக்கரப்படை ஏந்திய திருமாலைப்போல்; மெய்த்திருவின் - உண்மையான திருமகள்பால்; ஏக - சென்றுவிட (அதனால்); பூ இயல் - பூக்களால் அமைந்த; அமளி மேலா - படுக்கையின் மேல்; பொய் உறக்கு - பொய்யான உறக்கத்தை; உறங்குவானை - மேற்கொண்டிருப்பவனை (இராவணனை); காவி அம் கண்ணி தன்பால் - நீலமலர் போன்ற கண்களை உடைய பிராட்டியின் பக்கம்; கண்ணிய - பொருந்திய; காதல் நீரின் - காதல்என்னும் நீரால்; ஆவியை - தன்னுடைய உயிரை; உயிர்ப்பு என்று ஓதும் -பெருமூச்சு என்று கூறப்படும்; அம்மியிட்டு - அம்மியிலே வைத்து; அரைக்கின்றானை - அரைக்கின்றவனை (இராவணனை). பிராட்டிபிரிந்தமையால் நேமியான் (இராமன்) உறங்கிலன். பிராட்டின் காதல் பெறாமையால் இராவணன் உறங்கிலன். நேமியான் என்பது திருமாலையும் குறிக்கும் என்பர் (சிலர்) இறைவன் பிராட்டியைப் பிரியான் ஆகையால் அவ்வுரை பொய்யுரை என்க. இராமபிரான் உறக்கத்தைக் கவிச்சக்கரவர்த்தி பலபடியாகப் பேசுவான். கங்குல்பொழுதும் துயிலாத கண்ணன் என்று கடல்காண் படலம் பேசும். பூவியல் அமளி, சிலேடை - இராமனுக்குக் கொள்ளுங்கால் பூமியாகிய அமளி. இராவணனுக்குக் கொள்ளுங்கால் பூக்களால் அமைந்த படுக்கை. உறக்கு உறங்குதல் என்பது அரிய பிரயோகம். உறங்குதல் என்னும் வினை செய்தல் என்னும் பொருளைத் தந்தது. இயங்கலும் இயங்கும், மயங்கலும் மயங்கும் என்னும் சிலம்புப் பகுதியை (22-154) நோக்குக. இங்கு அரும்பதவுரை இயங்குதலைச் செய்யும், மயங்குதலைச் செய்யும் என்று விளக்கம் தந்தது. சில இடங்களில் 'நச்சர், அழகர்' பெயராய் நின்றது என்பர். அதுபோல் இங்கு (பொது) வினையாய் என்று கூறலாம் போலும். 'வெருவந்த' என்னும் குறளுக்கு காரி ரத்தினம் வரைந்த நுண்பொருள் காண்க. கண்ணிய -பொருந்திய. புடை கண்ணிய ஒளிராழியின் வெளிபோதரு புயலின் (ரகு வம்சம் - ரகு - யாக 17) (213) |