5048. | மிகும்தகைநினைப்பு முற்ற உருவெளிப் பட்ட வேலை, நகுந்தகைமுகத்தன், காதல் நடுக்குறுமனத்தன், 'வார்தேன் உகும்தகைமொழியாள் முன்னம் ஒருவகை உறையுள் உள்ளே புகுந்தனள்அன்றோ ?' என்று மயிர்புறம்பொடிக்கின்றானை-* |
மிகும் - பெருகுகின்ற; தகை - தன்மையுடைய; நினைப்பு - எண்ணம்; முற்ற - அதிகரிக்க (அதனால்); உரு - பிராட்டியின் வடிவம்; வெளிப்பட்ட வேலை - வெட்ட வெளியில் தோன்றியபோது; நகும்தகை முகத்தன் - சிரிக்கும் தன்மை கொண்ட முகத்தை உடையவனாய்; காதல் - காதலாலே; நடுக்குறு மனத்தன் - கலங்கிய உள்ளத்தை உடையவனாய்; வார்தேன் - (தேனடையிலிருந்து) ஒழுகும் தேன்; உகும் தகை - சிந்தும் தன்மைபெற்ற; மொழியாள் - மொழியை உடைய சீதை; முன்னம் - (சூர்ப்பனகை) அறிமுகப்படுத்திய போது; ஒருவகை - ஒருவாறு; உறையுள் உள்ளே - என் தங்குமிடத்துக்குள்ளே; புகுந்தனள் அன்றோ - புகுந்தாள் அல்லவா!; என்று - என்று கருதி; புறம் - உடம்பில்; மயிர் பொடிக்கின்றானை - மயிர்க் கூச்சடைபவனை (இராவணனை). முன்பு உள்ளத்தேபுகுந்தவள் வெளிப்பட்டாள் என்று கருதிப் புளகம் உற்றான். (214) |