5049. | மென்தொழில் கலாப மஞ்ஞை வேட்கைமீக்கூரு மேனும் குன்று ஒழித்துஒருமாக் குன்றின் அரிதின்சேர் கொள்கை போல வன்தொழில்கொற்றப் பொன்தோள் மணந்துஅருமயிலே அன்னார் ஒன்றுஒழித்துஒன்றின் ஏக அரியதோள் ஒழுக்கி னானை-* |
மென்தொழில் -நுட்பமானவேலைப்பாடமைந்த; கலாபம் - தோகைகளையுடைய; மஞ்ஞை - மயில்; வேட்கை மீக்கூருமேனும் - ஆசை அதிகரித்தாலும்; குன்று ஒழித்து - ஒருமலையை விட்டு விட்டு; ஒரு மாக்குன்றின் - ஒரு பெரிய மலையினை; அரிதின் சேர் - வருத்தப்பட்டுச் சேர்கின்ற; கொள்கை போல் - தன்மை ஒப்ப; அருமயிலே அன்னார் - சிறந்த மயில் போன்ற மகளிர்; வன்தொழில் - போர்த்தொழிலும் (அதனால் பெற்ற); கொற்றம் - வெற்றியும் உடைய; பொன்தோள் - அழகிய தோள்களை; மணந்து - தழுவி; ஒன்று ஒழித்து - ஒரு தோளை விட்டுவிட்டு;ஒன்றின் ஏக - மற்றொரு தோளின்பக்கம் செல்ல; அரிய - அருமையாயிருக்கின்ற; தோள் ஒழுக்கினானை - தோள் வரிசையுடையவனை (இராவணனை). மென்மை -நுட்பம். தோகையில் அமைந்த வண்ண நுட்பம், வடிவ நுட்பம். வன்தொழில் - போர். வீரர்களின் தோள்களின் தொழில் 'போர்' என்க. இராவணனின்ஒருதோள் புணர்ந்த மாதர் பின்னும் ஒரு தோளை இச்சித்துச் சென்று கூடுகிறது. ஒரு மலையில் உள்ள மயில் வேறு ஒரு மலைக்குப் பெயர்த்து செல்வது போன்றது (பழையவுரை). (215) |