5056.

ஆலம்பார்த்து உண்டவன்போல்
     ஆற்றல்அமைந்துளர் எனினும்
சீலம் பார்க்கஉரியோர்கள்
     எண்ணாதுசெய்பவோ ?-
மூலம்பார்க்குறின் உலகை
    முற்றுவிக்கும் முறைதெரினும்
காலம் பார்த்து,இறைவேலை
     கடவாதகடல் ஒத்தான்.

(அனுமன்)

     உலகை - உலகங்களை; முற்றுவிக்கும் - அழிக்கின்ற; முறைதெரினும்
-
இயல்பை உடையது என்றாலும்; காலம் பார்த்து - காலத்தின் (ஆணையை)
எதிர்பார்த்து; இறை - சிறிதுகூட; வேலை கடவாத - கரையை மீறிப்போகாத;
கடல் ஒத்தான் - கடலைப்போல இருந்தான்; மூலம் - (அவ்வாறு
அடங்கியதற்கு) காரணத்தை; பார்க்குறின் - ஆராய்ந்தால்; பார்த்து -
தேவர்களின்
 துன்பத்தை நோக்கி;ஆலம் - விடத்தை; உண்டவன்போல் -
உட்கொண்ட சிவபிரானைப்போல; ஆற்றல் - வலிமை; அமைந்துளர்
எனினும் -
அமையப் பெற்றவர் என்றாலும்; சீலம் - (தமக்குரிய)
ஒழுக்கத்தை; பார்க்க உரியோர்கள்  - பாதுகாக்கும் இயல்புடையவர்கள்;
எண்ணாது - ஆராயாமல்; செய்பவோ - ஒரு செயலைச் செய்வார்களோ ?.

     வேலை - கரை.'வேலை கடவாத பள்ளக்கடல்' (கம்ப - 1925) சீலம்
பார்த்தல். ஒழுக்கத்தைப் பாதுகாத்தல். காலம் கருதியிருப்பர்... ஞாலம்
கருதுபவர் என்று குறள் பேசும் (குறள் - 485).                  (222)