5057. | இற்றைப்போர்ப் பெருஞ்சீற்றம் என்னோடும்முடிந்திடுக; கற்றைப் பூங்குழலாளைச் சிறைவைத்தகண்டகனை முற்றப் போர்முடித்தது ஒரு குரங்குஎன்றால், முனைவீரன் கொற்றப்போர்ச் சிலைத்தொழிற்குக் குறைவு உண்டாம் ! எனக் குறைந்தான். |
(அனுமன்) இற்றை - இன்றைய தினத்தில்; போர் - (இராவணனுடன்) போர் செய்ய வேண்டும் என்னும்; பெருஞ்சீற்றம் - பெரியகோபம்; என்னோடு - எனக்குள்ளேயே; முடிந்திடுக - அடங்கிக் கிடக்கட்டும்; பூ - மலரணிந்த; கற்றைக்குழலாளை - அடர்ந்த கூந்தலையுடைய பிராட்டியை; சிறை வைத்த - சிறையிலே வைத்த; கண்டகனை - முள்போலும் இராவணனை; ஒரு குரங்கு - ஒரு குரங்கு; முற்ற - அழிய; போர் - போரிலே; முடித்தது - அழித்தது; என்றால் - என்று பேசப்பட்டால் (அது); முனைவீரன் - போரில் வல்ல இராமபிரானின்; கொற்றம் - வெற்றியைத் தருகின்ற; சிலை போர்த்தொழிற்கு - வில்லாற் செய்யப்படும் போர்ச் செயலுக்கு; குறை உண்டாம் - தாழ்ச்சி உண்டாகும்; என - என்று நினைந்து; குறைந்தான் - சீற்றம் தணிந்தான். பிராட்டி, ஐயன்வில்லின் ஆற்றலுக்கு மாசு உண்டாம் என்று கருதி, சொல்லினால் சுடாமல் அடங்கியிருந்தாள். அனுமனும் வீரன் சிலைக்குக் குறைவு உண்டாம் என்று கருதி இராவணனோடு போர் செய்தலைத் தவிர்த்தான். கண்டகன் - முள்போன்றவன். கண்டகம் - முள் இளம் கண்டகம் விட நாகத்தின் நாவொக்கும் ஈர்ம்புரவே (பாண்டிக்கோவை 283) முனை - போர். வேந்துடைத்தானை முனைகெட (புறம் 330). (223) |