5058.

அந்நிலையான் பெயர்த்துரைப்பான்;
     ஆய்வளைக்கை அணி இழையார்
இந் நிலையானுடன்துயில்வார்
     உளரல்லர்;இவன் நிலையும்
புல்நிலையகாமத்தால்
     புலர்கின்ற நிலை; பூவை
நல் நிலையின்உளள் என்னும்
     நலன்எனக்கு நல்குமால் !

     அந்நிலையான் -அவ்வாறுகோபம் அடங்கிய அனுமன்; பெயர்த்து -மறுபடியும்; உரைப்பான் - (தனக்குள்) கூறிக் கொண்டான்;
இந்நிலையானுடன் - இந்த நிலையற்றவனுடன்; துயில்வார் - உறங்குகின்ற;
ஆய்வளைக்கை - சிறந்த வளையலணிந்த கையையுடைய; அணியிழையார் -
மகளிர்; உளரல்லர் - இல்லை; இவன் நிலையும் - இவனுடைய தன்மையும்;
புல் நிலைய - புல் போன்ற தன்மையுடைய; காமத்தால் - காமத்தினாலே;
புலர்கின்ற நிலை - வெப்பம் அடைகின்ற நிலைமையானது; எனக்கு -
எனக்கு; பூவை - நாகணவாய்ப் பறவை போன்ற பிராட்டி; நல்நிலையில் -
நல்ல கற்புடனே; உளன் என்னும் - இருக்கின்றாள் என்கின்ற; நலன் - நல்ல
செய்தியை; நல்கும் - வழங்கும்.

     இராவணனின்விரகதாபம் பிராட்டி கற்பினுடன் இருப்பதைத் தெரிவிக்கும்
என்று அனுமன் யூகித்தான். அணியிழையாள் -என்பது மகளிர் என்னும்
பொருள் தந்து நின்றது.இனியர் இதனைப் பெயராய் நின்றது என்பர்.
வளையலணிந்த கையை உடையமகளிர் என்க. நிலையான் -உறுதியற்றவன்.                                           (224)