5067. | வடித்துஆய்பூங் குழலாளை வான் அறியமண் அறியப் பிடித்தான் இவ்அடலரக்கன் எனும்மாற்றம் பிழையாதால்; எடுத்து ஆழிஇலங்கையினை இருங்கடல்இட்டு இன்று இவனை முடித்தாலே யான்முடிதல் முறைமன்றஎன்றுணர்வான். |
(அனுமன்) வடித்து - சீவப்பெற்று; ஆய் பூ - ஆராய்ந்தெடுக்கப்பெற்ற பூக்கள் அணியப்பெற்ற; குழலாளை - கூந்தலையுடைய பிராட்டியை; இ அடல் அரக்கன் - இந்த வலிமை மிக்க இராவணன்; வான் அறிய - விண்ணுலகம் அறியவும்; மண் அறிய - மண்ணுலகம் அறியவும்;பிடித்தான் - கவர்ந்தான்; எனும் மாற்றம் - என்று பேசப்படும் மொழி; பிழையாது - தவறாது (நான்); ஆழி இலங்கையினை - கடல் நடுவுள்ள இலங்கை மாநகரை; எடுத்து - பெயர்த்தெடுத்து; இருங்கடல் இட்டு - பெரிய கடலினுள் போகட்டு; இவனை - இந்த இராவணனை; முடித்தால் - அழித்தால் (பிறகு) மன்ற உறுதியாக; யான் - நான்; முடிதல் - அழிதல்; மன்ற முறை - உறுதியாக நியாயம் ஆகும்; என்று உணர்வான் - என்று நினைப்பவன் ஆனான். வடித்து -சீவப்பெற்று. மஞ்சு ஒக்கும் அளகஓதி மழை ஒக்கும் வடித்த கூந்தல் என்று சூர்ப்பணகை பேசினாள். பிழையாதால் -ஆல் - அசை. முடித்தாலே - ஏ அசை. ஆழி - வட்டம். (233) |