அரக்கியர் கூட்டத்தில் சீதையின் நிலை 5071. | வன்மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க, அங்கு இருந்தாள்; கல் மருங்கு,எழுந்து என்றும் ஓர் துளி வரக் காணா நல்மருந்துபோல், நலன் அற உணங்கிய நங்கை, மென்மருங்குபோல், வேறு உள அங்கமும் மெலிந்தாள். |
கல் மருங்குஎழுந்து - கல்லின் பக்கத்திலே தோன்றி வளர்ந்து; என்றும் - எக்காலத்திலும்; ஓர் துளி வரக் காணா - ஒரு நீர்த்துளி வருதலை யறியாத; நல் மருந்து போல் - உயர்ந்த மூலிகையைப் போல; வன்மருங்குல் - பருத்த இடையை உடைய; வாள் அரக்கியர் - கொடிய அரக்கியர்கள்; நெருக்க - துன்புறுத்த (அதனால்); நலன் அற உணங்கிய நங்கை - உடல் நலமும் உள நலமும் அற்றுப்போக வாடிய பிராட்டி; மெல் மருங்குல் போல் - மெல்லிய இடையைப் போல; வேறு உள அங்கமும் - மற்றைய அங்கங்களும்; மெலிந்தாள் - இளைத்து; அங்கு இருந்தாள் - அசோக வனத்தில் இருந்தாள். மென்மருங்குல்சிற்றிடையைக்குறிக்கும். அதுபோல் வன்மருங்குல் பேரிடையைக் குறிக்கும். மருந்து - மூலிகை. மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி (புறம் 180) 'வாள் அரக்கியர், பல முகத்தார் எழு நூறு பேர்; நல் மருந்து மிருதசஞ்சீவினி என்பன பழையவுரை (அடை - பதி) (3) |