5072. | துயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்; வெயிலிடைத்தந்த விளக்கு என ஒளி இலா மெய்யாள்; மயில் இயல்,குயில் மழலையாள், மான் இளம் பேடை அயில் எயிற்றுவெம் புலிக் குழாத்து அகப்பட்டதன்னாள். |
துயில்என -உறக்கம்என்று கூறும்படி; கண்கள் இமைத்தலும் - கண்கள் மூடுதலையும்; முகிழ்த்தலும் துறந்தாள் - (விழிப்பு என்னும்படி) திறத்தலையும் விட்டுவிட்டு; வெயில் இடை தந்த - சூரியனுக்கு எதிரே ஏற்றி வைத்த; விளக்கு என - விளக்கைப் போல; ஒளி இலா மெய்யாள் - ஒளி குன்றிய மேனியை உடைய; மயில் இயல் குயில் - மயிலின் சாயலையும் குயிலின் குரலையும்; மழலையாள் - பெற்ற பிராட்டி; இளம் மான் பேடை - இளமையுடைய பெண்மான்; அயில் எயிற்று வெம்புலிக் குழாத்து அகப்பட்டது அன்னாள் - கூரிய பற்களையுடைய கொடிய புலிக் கூட்டத்தில் சிக்கிக் கொண்டாற் போன்று இருந்தாள். சூரியனுக்கு எதிரேஏற்றப்பட்ட விளக்கைப்போல ஒளியற்ற பிராட்டி, புலியின் கூட்டத்தில் அகப்பட்ட மான்போல இருந்தாள். இமைத்தல் - கண்கள் மூடுதல். 'எரி அர வார மார்பர் இமையாரும் அல்லர் இமைப்பாரும் அல்லர்' (தேவாரம் 4. சிவன் எனும் 2) முகிழ்த்தல் - அரும்புதல். விழித்தல். துயில் எனக் கண்கள் இமைத்தல் என்றதனால் விழிப்பென மூடுதல் இல்லை என்க. வெயில் - சூரியன். 'வெயில் இள நிலவே போல் விரிகதிர் இடைவீச' (கம்ப. 2000) 'மயிலியல், குயில்' மழலையின் மான் இளம் பேடை' என்றும் பாடம் உண்டு. மயிலின் இயலையும் (சாயலையும்) குயிலின் குரலையும் பெற்ற பெண் மான் என்பது அதன் பொருள். "மானின் விழி பெற்ற மயில் வந்தது" என்று காமவல்லியைக் கூறும் கம்பர் இயற்கையை உன்னுக. (4) |