5073.

விழுதல்,விம்முதல், மெய் உற வெதும்புதல், வெருவல்,
எழுதல்,ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித்
தொழுதல்,சோருதல், துளங்குதல், துயர் உழந்து
                                உயிர்த்தல்,
அழுதல், அன்றி,மற்று அயல் ஒன்றும் செய்குவது
                                அறியாள்.

(பிராட்டி)

     விழுதல் -பூமியில் விழுதல்; விம்முதல் - தேம்பி அழுதல்; உறமெய்
வெதும்புதல்  -
அதிகமாக உடல் வெப்பம் அடைதல்; வெருவல் -
அஞ்சுதல்; எழுதல் - எழுந்திருத்தல்; ஏங்குதல்,
 இரங்குதல் - வருந்துதல்,
அழுதல்; இராமனை எண்ணித் தொழுதல் - இராமபிரானை நினைந்து
வணங்குதல்; சோருதல் - தளர்ச்சியடைதல்; துளங்குதல் - உடல் நடுக்கம்
அடைதல்; துயர் உழந்து உயிர்த்தல் - துன்பத்தால் சிதைந்து
பெருமூச்சுவிடுதல்; அழுதல் - புலம்புதல்; அன்றி - ஆகிய இச்செயலைத்
தவிர; அயல் ஒன்றும் - வேறு செயல்கள் எதுவும்; செய்குவது அறியாள் -
செய்வது அறியாதவளாக இருந்தாள்.

    பிராட்டி அழுதல்முதலான செயல்களைத் தவிர வேறு ஒன்றும்
அறியாதவளாய் இருந்தாள். மற்று - அசை. செய்குவது - கு - சாரியை.
'காய்குவள் அல்லளோ' - கலித்தொகை 79.                      (5)