5075.

அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதல் இவை அதிகம்
கரிய காண்டலும்,கண்ணின் நீர் கடல் புகக்
                                 கலுழ்வாள்;
உரிய காதலின்ஒருவரோடு ஒருவரை உலகில்
பிரிவு எனும்துயர் உருவு கொண்டாலன்ன
                                பிணியாள்.

     உலகில் -இந்தஉலகத்தில்; உரிய காதலின் ஒருவரோடு -
உரிமையாகக் கொண்ட காதலுடைய ஒருவரோடு; ஒருவரை - ஒப்பற்ற
அன்புடையவர்களை; பிரிவு எனும் துயர் - பிரிதல் என்னும் துன்பமானது;
உருவு கொண்டால் அன்ன - வடிவம் பெற்றாற் போன்ற; பிணியாள் -
நோயை உடைய பிராட்டி; அரிய மஞ்சினோடு - அழகிய மேகத்துடன்;
அஞ்சனம் முதல் - மை முதலான; அதிகம் கரிய இவை - சிறப்புற்ற கரிய
நிறம் உடைய இப் பொருள்களை; காண்டலும் - பார்த்தவுடன் (இராமன்
மேனியின் நிறம் மனத்தில் தோன்றுதலால்); கண்ணின்நீர் - கண்ணிலிருந்து
வரும் நீர்ப் பெருக்கு; கடல் புகக் கலுழ்வாள் - கடலில் பாயும்படி மனம்
உருகுவாள்.

     மேகம், மை,முதலான பொருள்கள் இராமபிரானை நினைப்பூட்டுதலால்
பிராட்டி துன்புற்றாள். 'இப்பொருள்' என்றது நீலக்கடல், காயாம்பூ
முதலானவற்றை. கலுழ்தல் - உருகுதல். கலுழத் தன் கையால் தீண்டி (சிந்தா.
8.38) 'ஒருவரொடு' என்பதில் உள்ள 'ஒடு' உருபை ஐயுருபாகக் கொள்க. உருபு
மயக்கம்.' நாகு வேயொடு நக்கு வீங்கு தோள்' என்னும் தொடரை உள்ளுக.
'ஒருவரை' என்பதில் உள்ள 'ஐ' சாரியை. இரண்டன் உருபன்று. 'யாவையும்
சூனியம் சத்து எதிர்' - சிவஞான போதம் - 7. யாவும் என்பது யாவையும்
என வந்துள்ளது - ஐ - சாரியை.                                (7)