5076.

துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி
                                      மஞ்சு
ஒப்பினான்தனைநினைதொறும், நெடுங் கண்கள்
                                     உகுத்த
அப்பினால்நனைந்து, அருந் துயர் உயிர்ப்புடை
                                      யாக்கை
வெப்பினால்புலர்ந்து, ஒரு நிலை உறாத மென்
                                     துகிலாள்.

     துப்பினால்செய்த - பவளத்தால் செய்யப்பெற்ற; கையொடு கால்
பெற்ற -
கைகளையும் கால்களையும் பெற்ற; துளி மஞ்சு ஒப்பினான்தனை -
மழை பொழியும் மேகம் போன்ற இராமபிரானை; நினைதொறும் - நினைக்கும்
போதெல்லாம்; நெடுங்கண்கள் உகுத்த - நீண்ட கண்கள் சிந்திய;
அப்பினால் நனைந்து - கண்ணீரால் நனையப் பெற்று; அருந்துயர்
உயிர்ப்புடை யாக்கை -
போக்க முடியாத துன்பமும் பெருமூச்சும் பெற்ற
உடம்பின்; வெப்பினால் உலர்ந்து - வெப்பத்தால் உலர்ந்து; ஒருநிலை
உறாத -
ஒருபடித்தாய் இராத; மென்துகிலாள் - மெல்லிய ஆடையுடையளாய்இராநின்றாள்.

      பவளக்காலும்பவளக்கையும் பெற்ற மேகம், என்றது இல்பொருள்
உவமையணி.                                                (8)