5078.

கமையினாள்திரு முகத்து அயல் கதுப்பு உறக்
                                    கவ்வி,
சுமையுடைக் கற்றை, நிலத்திடைக் கிடந்த, தூ
                                    மதியை
அமைய வாயில்பெய்து, உமிழ்கின்ற அயில் எயிற்று
                                   அரவின்,
குமையுறத்திரண்டு, ஒரு சடை ஆகிய குழலாள்.

     கமையினாள் -பொறுமைஉடைய பிராட்டியின்; திருமுகத்து அயல் -அழகிய முகத்தின் இரு பக்கங்களிலும்; கதுப்பு உறக் கவ்வி -
கன்னங்களில்நன்றாகப் பற்றி; நிலத்திடைக் கிடந்த - பூமியிலே படிந்துள்ள;
சுமை உடைகற்றை - பாரம் உடைய கூந்தலின் தொகுதியானது; தூமதியை
அமையவாயில் பெய்து -
தூய்மையான சந்திரனை வாயில் இட்டு;
உமிழ்கின்றஅயில் எயிற்று அரவின் - வெளியிலே உமிழ்கின்ற
கூரியபற்களையுடையஇராகுவைப் போல; குமை உறத்திரண்டு - நெருக்கம்
மிகுந்து திரட்சியாகி;ஒரு சடை ஆகிய குழலாள் - ஒரு சடையாகிய
கூந்தலையுடையாள்.

     கமை-பொறுமை.கதுப்பு-கன்னம். நிலத்திடைக் கிடந்த கற்றை என
மாற்றுக. இது "தோல் போர்த்த என்பு உடம்பு" என்பதனை', என்பு தோல்
போர்த்த உடம்பு' (குறள்.80) என்று கூறியதை ஒக்கும். நிலத்திடைக் கிடந்த
என்னும் அடைமொழியை மதிக்குச் சேர்ப்பாரும் உளர். குழல் சடையாயிற்று
என்பதைப் போலவே 'நறுங்குஞ்சி ஈண்டு சடையாயினது என்று பேசுவார்
(கம்ப. 5284)                                               (10)