5083. | 'அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் ?' என்று அழுங்கும்; 'விருந்து கண்டபோது என் உறுமோ ?' என்று விம்மும்; 'மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட நோய்க்கு ?' என்று மயங்கும் - இருந்த மா நிலம்செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள். |
இருந்த மாநிலம்- தான்அமர்ந்துள்ள இடப்பரப்பு; செல் அரித்து எழவும் - கரையானால் அரிக்கப் பெற்றுப் புற்று தோன்றினும்; ஆண்டு எழாதாள் - அவ்விடத்திருந்து பெயர்ந்து போகாத பிராட்டி; அருந்தும் மெல் அடகு - உண்ணும் மெல்லிய 'இலைக்கறி' உணவை; (இராமபிரான்) ஆர் இட அருந்தும் - எவர் பரிமாற உண்பான்; என்று அழுங்கும் - என்று கூறி இரங்கித் துன்புறுவாள்; விருந்து கண்ட போது - (பரிமாறும் யான் பக்கத்தில் இல்லாமையால்) விருந்தினரைப் பார்க்கும் சமயத்தில்; என் உறுமோ - என்ன துன்பம் அடைவானோ; என்று - என்று நினைந்து; விம்மும் - ஏக்கம் அடைவாள்; யான் கொண்ட நோய்க்கு - யானே வரவழைத்துக் கொண்ட பிணிக்கு; மருந்தும் உண்டு கொல் - மருந்தும் உள்ளதோ; என - என்று கூறி; மயங்கும் - சோர்வு அடைவாள். விருந்தினரைஉபசரிக்கவே இல்லாளை மணப்பது இலட்சிய வாழ்வு. இராமபிரான் விருந்தினரை உபசரிக்க முடியாமல் வருந்துவான் என்று பிராட்டி வருந்துகிறாள். 14ஆம் பாடலில் உள்ள நாயகன் இப்பாடலில் அக எழுவாய் பிராட்டி புற எழுவாய். பிராட்டி இராமன் துன்புறுவானோ என்றுவருந்துகிறாள் என்று தொடராக்கி நோக்கின் புற எழுவாய், அக. எழுவாய் புலனாகும். மெல் அடகு - வெற்றிலை என்பாரும் உளர். அப்போது அது வினைத்தொகை. (15) |