5084. | "வன்கண் வஞ்சனை அரக்கர், இத்துணைப் பகல் வையார்; தின்பர்; என் இனிச் செயத்தக்கது ?" என்று, தீர்ந்தானோ ? தன் குலப் பொறை தன் பொறை எனத் தணிந்தானோ ? என்கொல் எண்ணுவேன் ?' என்னும் - அங்கு, இராப் பகல் இல்லாள். |
இராப் பகல்இல்லாள் - இரவையும் பகலையும்அறியாத பிராட்டி; அங்கு - அவ் அசோகவனத்தின்கண்; வன்கண் வஞ்சனை அரக்கர் - கொடுமையும் வஞ்சகமும் உடைய அரக்கர்கள்; இத்துணைப் பகல் வையார் - இவ்வளவு நாள்கள் (பிராட்டியை) உயிருடன் வைத்திருக்கமாட்டார்கள்; தின்பர் - தின்றிருப்பார்கள்; இனி - இப்போது; செயத்தக்கது என் என்று-செய்யக்கூடியது யாது என்று கருதி; தீர்ந்தானோ - (இராமபிரான்) என்னைத்தேடுவதை விட்டுவிட்டானோ ?; தன் குலப்பொறை - (அல்லது) தன்குலத்தவர்கள் மேற் கொண்ட பொறுமை; தன் பொறை என - தன்னுடையபாரம் என்று கருதி; தணிந்தானோ - சாந்தம் அடைந்தானோ; என்எண்ணுவேன் கொல் என்னும் - எதை நினைப்பேன் என்று கூறுவாள். பொறை -பொறுமை. பொறை என்பதற்கு அரசபாரம் எனக் கொண்டு தனக்குரிய அரச பாரத்தை மேற்கொண்டு திரும்பி விட்டானோ என்றும் பொருள் கூறலாம். இப் பொறைக்கு... தன் பொறை எனத் தவிர்ந்தானோ என்னும் பாடம் ஆதரவு தரும். இக் கருத்து அடுத்த பாடலில் வருதலின் இவ்வுரை ஏற்க இயலவில்லை. விரும்பின் கொள்க ? இராப் பகல் இல்லாள் என்னும் எழுவாய் 28 பாடல் வரை தொடரும். 29ஆம் பாடலில் இருந்தனள் என்னும் பயனிலைக்கு இது எழுவாய். 'ஆங்கு இராப் பகல்' என்பதில் உள்ள 'ஆங்கு' அசை. 'அவ்விடத்தில்' என்றும் பொருள் கூறலாம் அது சிறப்பன்று (கலி1.) (16) |