5086. | 'முரன் எனத் தகும் மொய்ம்பினோர் முன் பொருதவர்போல், வரனும், மாயமும்,வஞ்சமும், வரம்பு இல வல்லோர் பொர நிகழ்ந்ததுஓர் பூசல் உண்டாம் ?' எனப் பொருமா, கரன் எதிர்ந்ததுகண்டனள் ஆம் எனக் கவல்வாள். |
முரன்எனத்தகும் - முரன் என்று கூறத்தகுந்த; மொய்ம்பினோர் - வலிமை உடையவர்களாய்; முன் - ஆதி காலத்தில்; பொருதவர்போல் - (திருமாலுடன்) போர் செய்தவர்களைப் போல; வரம்பில - எல்லையற்ற; வரனும் - வரங்கள் பெறுவதிலும்; மாயமும் - மாயங்கள் புரிவதிலும்; வஞ்சமும் - வஞ்சகங்கள் செய்வதிலும்; வல்லோர் - ஆற்றல் பெற்றவர்கள்; பொர - தாக்குதலாலே; நிகழ்ந்தது ஓர் பூசல் - உண்டான ஒப்பற்ற போர்; உண்டு ஆம் என - பெரிதாய் இருக்குமென்று கூறி; பொருமா - மனம் கலங்கி; கரன் எதிர்ந்தது - கரன்போர்க்களத்தில் போர் புரிவதை; கண்டனள் ஆம் என - நேரே கண்டாற் போல; கவல்வாள் - வருந்துவாள். கரன் போரைப்பிராட்டி பார்த்ததில்லை. இப்போது அது கண்களுக்குத் தெரிகிறது. அது கண்டனள் - அவர் பொர வந்ததும் பெருமான் கூடப் பொருகிறதும் வானவெளித் தோற்றமாகக் கண்முன்னே அந்தப் போர் கண்டவள் - என்பது பாடியுரை (அடை பதி) கரன் நெரித்து அது கண்டனள் ஆம் எனக் கலுழ்வாள் என்று பாடம் கொண்டு கைகளை நெரித்துக் கொண்டு அப்போரை நேரில் முன் பார்த்தது போல இப்பொழுதும் பாவித்து என்று பொருள் கூறலும் ஆம் (அடை - பதி) பொர - தாக்க. பொருபுனல் (சிறுபாண் - 118) 'போர் செய்ய' என்றும் கூறலாம். உண்டு - மிகுதி என்னும் பொருள் தந்தது. (18) |