5088.

'மெய்த்திருப்பதம் மேவு' என்ற போதினும்,
'இத் திருத்துறந்து ஏகு' என்ற போதினும்,
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும்முகத்தினை உன்னுவாள்.

     மெய்த்திருப்பதம் -  உண்மையான அரசபதவியை; மேவு என்ற
போதினும் -
அடைக என்று (மன்னவன்) கூறிய சமயத்திலும்; இத்திருத்
துறந்து -
இந்த அரச பதவியை விட்டு விட்டு; ஏகு என்ற போதினும் -
கானகம் செல்க என்று (கைகேசி) கூறிய சமயத்திலும்; சித்திரத்தின் அலர்ந்த
-
சுவர் ஓவியத்திலே மலர்ந்த; செந்தாமரை ஒத்திருக்கும் -
செந்தாமரையைப் போன்றிருக்கும்; முகத்தினை உன்னுவாள் - திருமுகத்தை
நினைப்பாள்.

    தாமரை பகலில்மலரும். இரவில் குவியும். ஓவியத் தாமரை எப்போதும்
ஒருபடித்தாக இருக்கும். ஓவியத் தாமரை போன்றது இராமன் முகம்.    (20)