5090. | இன்னல் அம்பர வேந்தற்கு இயற்றிய பல் நலம்பதினாலாயிரம் படை, கன்னல்மூன்றில், களப் பட, கால் வளை வில் நலம்புகழ்ந்து, ஏங்கி வெதும்புவாள். |
அம்பரவேந்தர்க்கு - விண்ணுலக அரசனாகியஇந்திரனுக்கும்; இன்னல் இயற்றிய - துன்பத்தைச் செய்த; பல் நலம் - பலவிதமான சிறப்பைப் பெற்ற; பதினாலாயிரம் படை - பதினாலாயிரம் படை வீரர்கள்; கன்னல் மூன்றில் - மூன்று நாழிகைக்குள்ளே; களப்பட - போர்க்களத்திலே அழிய; கால் வளை வில் நலம் - இரு முனையை வளைத்த வில்லின் சிறப்பை; புகழ்ந்து - கொண்டாடி; ஏங்கி வெதும்புவாள் - ஏக்கமுற்று வெம்மையடைவாள். படை என்றது சேனாவீரர்களை காலாட்படை என்னும் வழக்கை நோக்குக. இராமபிரான் பதினாலாயிரம் படையை மூன்று நாழிகையில் அழித்ததை 'வில் ஒன்றில் கடிகை மூன்றில் ஏறினர் விண்ணில்' என்னும் சூர்ப்பனகை மொழியை உன்னுக (கம்ப. 3130) (22) |