5091. | ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு,'எம்பி நின் தம்பி; நீ தோழன்; மங்கைகொழுந்தி' எனச் சொன்ன வாழி நண்பினைஉன்னி, மயங்குவாள். |
ஆழ நீர்க்கங்கை - ஆழமான நீரையுடைய கங்கையிலே; அம்பி கடாவிய - ஓடத்தை இயக்கின; ஏழை வேடனுக்கு - எளிய வேடனாகிய குகனிடத்தில்; எம்பி நின் தம்பி - என்னுடைய தம்பியாகிய இலக்குவன் உன்னுடைய தம்பி; நீ தோழன் - நீ எனக்குச் சகோதரன்; மங்கை கொழுந்தி - சீதை உன்னுடைய மைத்துனி; எனச் சொன்ன - என்று (பாசத்துடன்) கூறிய; நண்பினை - சகோதரப் பரிவினை; உன்னி - எண்ணி; மயங்குவாள் - கலக்கம் அடைவாள். வாழி - அசை. 'வாழிநண்பு' என்பதற்குக் குறைவுபடாத சினேகம்' என்று வி. கோவிந்தப்பிள்ளை அவர்கள் உரை வகுத்தார். இப் பாடல் 'ஏழை, ஏதலன்' என்று தொடங்கும் பெரிய திருமொழிப் பாசுரத்தைப் பின்பற்றி எழுந்தது. ஏழை வேடன் பால் அன்புடையவன், என்பால் வாராமையால் அவன் என்பால் சீற்றங் கொண்டானோ என்று பிராட்டி மனம்கலங்கினாள். வேடனுக்கு - வேடன்பால். நான்கன் உருபை ஏழன் உருபாக்குக. நாணற்கிழங்கு மணற்கு ஈன்ற முளை என்றாற் போல (மணலின் கண் ஈன்ற முளை என்பது பொருள்) (23) |