5092.

மெய்த்ததாதை விரும்பினன் நீட்டிய
கைத்தலங்களை,கைகளின் நீக்கி, வேறு
உய்த்த போது,தருப்பையில் ஒண் பதம்
வைத்த வேதிகைச்செய்தி மனக் கொள்வாள்.

     மெய்த்த -(யாவும்பிரமம் என்பதை) மெய்ப்பித்த; தாதை -
தந்தையாகிய சனகன்; விரும்பினன் - (திருவடிபற்ற வேண்டும் என்ற)
விருப்பத்துடன்; நீட்டிய கைத்தலங்களை - (தன் பக்கத்திலே) நீட்டிய
கைகளை; கைகளின் நீக்கி - தன்னுடைய கைகளாலே விலக்கி; வேறு
உய்த்த போது -
(தன் பாதத்தை) வேறிடத்தில் செலுத்திய காலத்தில்;
ஒண்பதம் -
அழகிய பாதத்தை; தருப்பையில் வைத்த - தருப்பைப் புல்லில்
வைத்த; வேதிகைச் செய்தி - மணவறைச் செயலை; மனம் கொள்வாள் -
இதயத்தில் எண்ணுவாள்.

    மெய்த்த -மெய்ப்பித்த, யாவும் பிரம்மம் என்று சனகன்
மெய்ப்பித்தவன். திருமணத்துக்கு முன் மணமகனாகிய இராமனுக்குப் பாதபூசை
செய்தல் முறையாதலின் அதன் பொருட்டு சனகனாகிய மாஞானி தன் கைகளை
இராமனது திருவடி நோக்கி நீட்டினான். ஞானியின் கரங்கள் தன் பாதத்தில்
படுதலை முறையன்று கருதிய இராமபிரானின் உயர்வு புலப்படுகிறது. உய்த்த -
போக்கிய. உய்த்த கால் உதயத்து உம்பர் (நாவரசர் தேவாரம்) இப்பாடலின்
பொருள் அரியது. நல் ஒழுக்கம் தவறாத தனது தந்தையாகிய மகாராசர்
விருப்பம் உள்ளவராகிப் பிடித்துக் கொடுத்த தன்கைகளை அவரது கைகளில்
வைத்த போது தன்கைகளைச் சனகரிடமிருந்து பெற்றுக் கொண்ட தன்
நாயகராகிய இராமர் சப்தபதி என்னும் சடங்கை நிகழ்த்தத் தன் கால்களைப்
பிடித்துத் தருப்பைப் புல்லில் வைத்து நடத்திய மணநிகழ்ச்சியை நினைவில்
கொள்வாள் என உரை கூறலும் ஒன்று.                        (24)