5093.

உரம்கொள் தே மலர்ச் சென்னி, உரிமை சால்
வரம் கொள்பொன் முடி, தம்பி வனைந்திலன்,
திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக்கு
இரங்கி ஏங்கியதுஎண்ணி, இரங்குவாள்.

     தம்பி - தன்னுடையதம்பியாகிய பரதன்; உரம்கொள் தேமலர் -
சிறப்பைக் கொண்ட பூக்களையும்; உரிமைசால் - உரிமை நிரம்பிய;
வரம்கொள் பொன் முடி -
(கைகேசி) வரத்தாற் பெற்ற கிரீடத்தையும்;
சென்னி -
தலையில்; வனைந்திலன் - அணியாமல்; திரங்கு செஞ்சடை
கட்டிய -
திரிக்கப்பட்ட சடையைக் கட்டிக் கொண்ட; செய்வினைக்கு -
விதிக்கு; இரங்கி ஏங்கியது எண்ணி - மனம் கரைந்து வருந்தியதை
நினைத்து; இரங்குவாள் - வருத்தம் அடைவாள்.

     மலர்ச்சென்னிஎன்பதற்கு மலரணிந்த தலை என்று பொருள் கூறினர்.
தகும் எனிற் கொள்க. செய்வினை - விதி; செய்வினை மருங்கின் எய்தலும்
உண்டு (மணிமேகலை) பரதன்பால் கொண்ட பாசம் தன் பால் இல்லையே
என்று பிராட்டி தன்னிரக்கம் கொண்டாள்.                       (25)