5097.

வெவ்விராதனை மேவு அருந் தீவினை
வவ்வி, மாற்றஅருஞ் சாபமும் மாற்றிய
அவ் இராமனைஉன்னி, தன் ஆர் உயிர்
செவ்விராது,உணர்வு ஓய்ந்து, உடல் தேம்புவாள்--

     வெவ் விராதனை -கொடுமைசெய்யும் விராதனை; மேவு - சென்று
சேர்ந்த; அருந் தீவினை வவ்வி - கொடிய பாவங்களை வாங்கிக் கொண்டு;
மாற்ற அரும் -
வேறு எவராலும் போக்க முடியாத; சாபமும் - சாபத்தையும்;
மாற்றிய -
போக்கிய; அவ் இராமனை உன்னி - அந்த இராமனை
நினைந்து; தன் ஆருயிர்  -தன்னுடைய அருமையான உயிர்; செவ் இராது -
செம்மையாய் (உறுதியாய்) இல்லாமல்; உணர்வு ஓய்ந்து - அறிவு தளர்ச்சி
அடைந்து; உடல் தேம்புவாள் - உடல் இளைப்பாள்.

     விராதனையேமன்னித்த பெருமான் தன்பால் அருளின்றி உள்ளான்;
காரணம் தன் மேல் சீற்றம் போலும் என்று கருதும் போது பிராட்டியின்
துன்பம் அளவு கடந்தது.                                      (29)