கலி விருத்தம்

(வேறு)

5098.

இருந்தனள்;திரிசடை என்னும் இன் சொலின்
திருந்தினாள்ஒழிய, மற்று இருந்த தீவினை
அருந் திறல்அரக்கியர், அல்லும் நள் உறப்
பொருந்தலும்,துயில் நறைக் களி பொருந்தினார்.

     இருந்தனள் -(பிராட்டி) இருந்தாள்; திரிசடை எனும் - திரிசடை
என்கின்ற; இன்சொலின் திருந்தினாள் ஒழிய - இனிய சொற்கள் பேசுவதில்
திருத்தம் பெற்ற மங்கையைத் தவிர; இருந்த - (பிராட்டியைக் காத்துக்
கொண்ட) சுற்றியிருந்த; அருந்திறல் தீவினை - பேராற்றலும் தீவினையும்
உடைய; அரக்கியர் - அரக்கப் பெண்கள்; நள் அல் உற பொருந்தலும் -
நடுச்சாமத்தை இரவு அடைந்த அளவில்; துயில் நறைக்களி - உறக்கமாகிய
கள்ளின் மயக்கத்தில்; பொருந்தினார் - ஐக்கியமானார்கள்;

     இன்சொலின்திருந்தினள் என்னும் தொடர் மங்கை என்னும் பொருள்
தந்து நின்றது. திரிசடை என்னும் மங்கை என்க. இருந்தனள் என்னும்
தெரிநிலை வினைமுற்றுக்கு எழுவாய் ஒளியிலா மெய்யள். 42. உணங்கிய
நங்கை எழுவாயாயின் அங்கே ஒரு இருந்தனள் என்னும் முற்று உள்ளது.
ஆதலின் அது பொருந்தாது. இவ் விருத்தம் விளம் - விளம் - மா - கூவிளம்
என்னும் சீர்களைப் பெற்று வரும். இத்தகைய பாடல்கள் இந்நூலில் 2177
உள்ளன. (மணிமலர் 76)                                    (30)