சீதைதிரிசடையிடம் உற்றது கூறல்

5099.

ஆயிடை,திரிசடை என்னும், அன்பினால்
தாயினும்இனியவள்தன்னை நோக்கினாள்,
'தூய நீ கேட்டி,என் துணைவி ஆம்' எனா,
மேயது ஓர்கட்டுரை விளம்பல் மேயினாள்.

     ஆயிடை - (அரக்கியர்உறங்கியிருந்த) அப்பொழுது (பிராட்டி);
திரிசடை என்னும் -
திரிசடை என்னும் பெயர் பெற்ற; அன்பினால் -
அன்பினாலே; தாயினும் இனியவள் தன்னை -  தாயைவிட
இனிமையானவளை; நோக்கினாள் -  பார்த்து; தூயநீ - பரிசுத்தமாயிருக்கும்
நீ; கேட்டி - கேட்பாயாக ! (நீ) என் துணைவியாம் - நீ என்னுடைய
தோழியாவாய்; எனா - என்று; மேயது ஓர் கட்டுரை - அனுபவித்ததை
உணர்த்தும் ஒப்பற்ற மொழியை; விளம்பல் மேயினாள் - சொல்லத்
தொடங்கினாள்.

     அரக்கியர் உறங்கும்சமயத்தில் பிராட்டி திரிசடையிடம் தான்
அனுபவத்திற்கண்டதைக் கூறினாள். மேயது - அனுபவித்தது. மேயது என்னும்
தெரிநிலை முற்று பெயரெச்சமாயிற்று. (மேய கட்டுரை) மேய கட்டுரை
அனுபவமொழி. கட்டுரை என்பது தனித்தன்மையிழந்து மொழி என்னும்
பொருள் தந்தது.                                         (31)