5101. | 'முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள், துனி அறு புருவமும்,தோளும், நாட்டமும், இனியன துடித்தன;ஈண்டும், ஆண்டு என நனிதுடிக்கின்றன;ஆய்ந்து நல்குவாய். |
முதல்வன் -(எனக்கு)ஆதாரமான இராமபிரான்; மிதிலையில் - மிதிலை மா நகரில்; முனியொடு முந்து நாள் - கோசிக முனிவனுடன் வந்த காலத்தில்; துனி அறு - குற்றம் அற்ற; புருவமும் தோளும் நாட்டமும் - புருவமும் தோளும் கண்ணும்; இனியன துடித்தன - இன்பத்தை விளைவிப்பனவாய் துடித்தன; ஈண்டும் - இச்சமயத்திலும்; ஆண்டு என - அங்கே துடித்தாற் போல; நனி துடிக்கின்றன - இடையறாமல் துடிக்கின்றன; (இதன் காரணத்தை) ஆய்ந்து நல்குவாய் - (ஆராய்ந்து) கூறுவாயாக. "நல் எழில்உண்கணும் ஆடுமால் இடனே" (கலி.11) (33) |