5102.

'மறந்தனென்; இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்;
அறம் தரு சிந்தைஎன் ஆவி நாயகன்,
பிறந்த பார்முழுவதும் தம்பியே பெறத்
துறந்து, கான்புகுந்த நாள், வலம் துடித்ததே.

     மறந்தனென் -நான்ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன்; இதுவும் ஓர்
மாற்றம் -
இந்த ஒரு மொழியையும்; கேட்டி - கேள்; அறம் தரு சிந்தை -
அறத்தைப் பாதுகாக்கின்ற உள்ளத்தைப் பெற்ற; என் ஆவி நாயகன் -
என்னுடைய உயிர்த் தலைவன்; பிறந்த பார் முழுவதும் - மூத்தவனாகப்
பிறந்ததனால் அடைய வேண்டிய பூமி முழுவதையும்; தம்பியே பெற -
தம்பியாகிய பரதனே அடையும்படி; துறந்து - (அவற்றையெல்லாம்)
விட்டுவிட்டு; கான் புகுந்த நாள் - காடு புகுந்த காலத்து; வலம் துடித்தது -
வலப்பக்கம் துடித்தது.

     கேட்டி - ஆல் -அசை. ஆவி நாயகன் - உயிர்த்தலைவன். மகளிர்க்கு
வலம் துடித்தல் தீமை யாதலின் இது சீதைக்குத் தீமையை அறிவிப்பதாக
ஆயிற்று.                                               (34)