5107. | 'துயில் இலை ஆதலின், கனவு தோன்றல; அயில்வழி அனையகண் அமைந்து நோக்கினேன்; பயில்வன பழுதுஇல, பழுதின் நாடு என; வெயி்லினும்மெய்யன விளம்பக் கேட்டியால். |
துயில் இலை -நீஉறங்குவது இல்லை; ஆதலின் - ஆகையினால் (உனக்கு); கனவு தோன்றல - கனவுக் காட்சிகள் தெரிவதில்லை; அயில் விழி அனைய கண் அமைந்து - கூரிய வேல் போன்ற கண்கள் மூடுதலாலே; நோக்கினேன் - கனவுக் காட்சிகளைக் கண்டேன்; பழுதின் நாடு - குற்றத்துக்கு உறைவிடமான இந்நாட்டில்; பயில்வன - அந்தக் கனவில் நிகழ்ந்தவை; பழுது இல - குற்றம் அற்றவை; பண்பு தூயன - பண்பால் தூய்மை பெற்றவை; வெயிலினும் - சூரியனை விட; மெய்யன - உண்மையுடையவை (அதனை); விளம்பக் கேட்டி - சொல்லக் கேள். அயில்விழி -கண் என்னும் பொருட்டாய் நின்றது. வேற்கண் கண்ணென்னும் மாத்திரை என்று உரை வகுத்தார் நச்சர். துயில் 'அலை' என்னும் பாடம் சிறக்கும் போலும். (சிந். 1487) 'மெய்யன' என்பது பாடமானால், உதயமாதலும் அஸ்தமித்தலும் தப்பாதுடைய சூரியன் போல் தப்பாது பலிக்கும் அவைகள். நான் கண்ட சொப்பன வகைகள் என ஆம் (வி.கோ. பிள்ளை) (39) |