5112.

'வில்-பகல் இன்றியே, இரவு விண்டு அற,
எல் பகல்எறித்துளது என்னத் தோன்றுமால்;
மல் பக மலர்ந்ததோள் மைந்தர் சூடிய
கற்பக மாலையும்புலவு காலுமால்.

     வில் - ஒளியொடு கூடிய; பகல் இன்றி - பகற்காலம் இல்லாமல்
(இரவில்); இரவு விண்டு அற - இருள் நீங்கி ஒழியும்படி; எல்பகல்
எறிந்துளது என்ன -
சூரியன் பகலிலே ஒளியைப் பரப்புவது போல்;
தோன்றும் - காட்சி தரும்; மல்பக - (எதிர்த்த) மல்லர்கள் பிளவு படும்படி;
மலர்ந்த தோள் மைந்தர் - விரிந்த தோள்களையுடைய வீரர்கள்; சூடிய -
அணிந்த; கற்பக மாலையும் - (தெய்வத்தன்மையுடைய) கற்பக மலரால்
கட்டப் பெற்ற மாலையும்; புலவு காலும் - புலால் நாற்றம் வீசும்.

    இரவில்உண்டாகும் ஒளியும், மாலை புலால் நாற்றம் வீசுவதும்
கேட்டுக்கு அறிகுறி. கற்பகம் தெய்வத்தன்மை உடையது. அதில் புலால்
நாற்றம் வீசுவது அதிசயம்.                                   (44)