5115.

'விண்தொடர் மதியினைப் பிளந்து, மீன் எழும்;
புண் தொடர்குருதியின் பொழியுமால் மழை;
தண்டொடு,திகிரி, வாள், தனு என்று இன்னன,
மண்டு அமர்புரியுமால், ஆழி மாறு உற.

     மீன் - நட்சத்திரங்கள்;விண்தொடர் மதியினைப் பிளந்து -
ஆகாயத்தில் செல்லும் சந்திரனைப் பிளந்து கொண்டு; எழும் - மேலே
போகும்; மழை - ஆகாயத்தை மூடிய மேகம்; தொடர்புண்குருதி - ஆறாத
புண்ணின் இரத்தத்தை; பொழியும் - கொட்டும்; தண்டு திகிரி வாள் தனு
என்று இன்னன -
தண்டாயுதம், சக்கரம், வாள், வில் என்று பேசப்படுகிற
(திருமாலின்) ஆயுதங்கள்; ஆழி மாறு உற - கடல்கள் ததும்பிக்
கொந்தளிக்க; மண்டு அமர் புரியும் - நெருங்கிப் போர் செய்யும்.

    'மண்டு அமர்புரியும்' எனவே ஏவுவார் இன்றி படைகள் தாமே போர்
செய்யும் என்க. ஆல் - அசை. குருதி - இன் - பொழியும். இன் - அசை.
தண்டொடு என்பதில் உள்ள ஒடு அசை. போது பொதுள என்பதைப்
'போதொடு பொதுள' என்று குறுந்தொகை பேசும் (குறுந்.155.)        (47)