துயிலுணர்ந்தஅரக்கியர் நிலை 5123. | அவ் வயின்அரக்கியர் அறிவுற்று, 'அம்மவோ ! செவ்வை இல்துயி்ல் நமைச் செகுத்தது ஈது !' எனா, எவ் வயின்மருங்கினும் எழுந்து வீங்கினார்-- வெவ் அயில்,மழு, எழு, சூல வெங் கையார். |
அ வயின் -அந்தச்சமயத்தில்; அரக்கியர் - (காவலாய் உள்ள) அரக்கிமார்கள்; அறிவுற்று - உறக்கம் தெளிந்து; அம்மவோ - அந்தோ (ஐயோ); இங்கு ஈது - இவ்விடத்தில் இப்படி; செவ்வை இல் துயில் - சிறப்புத் தராத உறக்கம்; நமை செகுத்தது - நம்மைக் கெடுத்து விட்டதே; எனோ - என்று கூறி; எவ் வயின் மருங்கினும் - எல்லாப் பக்கங்களிலும்; எழுந்து - எழுந்திருந்து; வெவ் அயில் - கொடிய வேலையும்; மழு - கோடாலியையும்; எழு - வளை தடியையும்; சூலம் - சூலத்தையும் (ஏந்திய); வெம் கையார் - கொடிய கைகளையுடையவராய்; வீங்கினார் - நெருங்கினார்கள். வீங்குதல் -நெருக்குதல் - கலாபம் வீங்க (சிந் 840) என்னும் தொடருக்கு வகுத்த உரை நோக்கத் தக்கது. செகுத்த தீங்கு எனப் பிரித்து, தீங்கு செகுத்த என்றும் உரை கூறலாம். அப்போது செகுத்தது என்பது செகுத்த என்று வந்தது; விகாரம் என்று கொள்க. ஒருமை பன்மை மயக்கம் என்று கொள்ள இடம் தரின் கொள்க. நச்சினார்க்கினியர் 'வேண்டுவ பிறிது ஒன்று உண்டோ (சிந்.2.93) என்னும் தொடரை ஒருமை பன்மை மயக்கம் என்றார். (55) |