5124. | வயிற்றிடைவாயினர்; வளைந்த நெற்றியில் குயிற்றியவிழியினர்; கொடிய நோக்கினர்; எயிற்றினுக்குஇடை இடை, யானை, யாளி, பேய், துயில் கொள்வெம் பிலன் என, தொட்ட வாயினர்.* |
(அந்தஅரக்கிமார்கள்) வயிற்றிடை வாயினர் -வயிற்றிலே வாயை உடையவர்கள்; வளைந்த நெற்றியில் - முன் நோக்கி வளைந்துள்ள நெற்றியிலே; குயிற்றிய விழியினர் - பதிக்கப் பெற்ற கண்களை உடையவர்கள்; கொடிய நோக்கினர் - கொடிய பார்வை உடையவர்கள்; எயிற்றினுக்கு இடையிடை - பற்களுக்கு நடுவில் நடுவில்; யானை, யாளி, பேய் - யானைகளும் யாளிகளும், பேய்களும்; துயில் கொள் - உறங்குகின்ற;வெம்பிலன் என - கொடிய மலைக்குகை போல; தொட்ட வாயினர் - பெரிய வாயை உடையவர். (56) |