சீதையின்வருத்தத்தை அனுமன் காணுதல்.

5129.

ஆயிடை,உரை அவிந்து, அழகன் தேவியும்,
தீ அனையர் முகம்நோக்கித் தேம்பினாள்;
நாயகன் தூதனும்,விரைவில் நண்ணினான்,
ஓய்விலன், உயர்மரப் பணையின் உம்பரான்.

     ஆயிடை - அவ்விடத்தில்;அழகன் தேவியும் - இராமபிரானின்
தேவியாகிய பிராட்டி; உரை அவிந்து -  பேச்சு ஒடுங்கி; தீ அனையவர்
முகம் -
நெருப்புப் போன்ற அரக்கிகளின் முகங்களை; நோக்கி - பார்த்து;
தேம்பினாள் -
மனங் கலங்கினாள் (அப்போது); நாயகன் தூதனும் -
இராமபிரானின் தூதனான அனுமனும்; ஓய்விலன் - தாமதிக்காமல்; விரைவில்
நண்ணினான் -
வேகமாக வந்து (பிராட்டியிருந்த); உயர் - உயர்ந்த; மரப்
பணையின் உம்பரான் -
மரக்கிளையை அடைந்தவன் ஆனான்.

    பிராட்டி இருந்தமரம் சிஞ்சுகமரம் என்று கூறுகின்றனர். சிஞ்சுகம் -
நூக்கம் என்று அகராதி பேசும். சிஞ்சுகம் அசோகம் போலும்.          (61)