5131.

விரி மழைக் குலம் கிழித்து ஒளிரும் மின் என,
கரு நிறத்துஅரக்கியர் குழுவில், கண்டனன்--
குரு நிறத்து ஒருதனிக் கொண்டல் ஊழியான்
இரு நிறத்துஉற்றவேற்கு இயைந்த காந்தத்தை.

     ஒரு தனி - ஒப்பற்றசிறப்புற்ற; குரு நிறத்து - ஒளி பொருந்திய
நிறத்தை உடைய; கொண்டல் - மேகம் போன்ற; ஊழியான் - யுகத்தின்
தலைவனாகிய இராமபிரானின்; இருநிறத்து உற்ற - பெரிய மார்பி்லே தைத்த;
வேற்கு -
பிரிவுத் (துன்பமாகிய) வேலைப் பறித்தெடுக்கும்; இயைந்த
காந்தத்தை -
பொருந்திய காந்தமாமணி போன்ற பிராட்டியை; கருநிறத்து
அரக்கியர் குழுவில் -
கரு நிறத்தைப் பெற்ற அரக்கிமார்களின் கூட்டத்தில்;
விரிமழைக்குலம் -
பரந்த மேகக் கூட்டத்தை; கிழித்து ஒளிரும் - பிளந்து
கொண்டு விளங்குகின்ற; மின் என - மின்னலைப் போல; கண்டனன் -
பார்த்தான்.

    மார்பில்பாய்ந்த இரும்புத் துண்டுகளை எடுக்கப் பயன்படும் காந்தம்
போல இராமனின் துன்பம் நீக்கும் பிராட்டி என்க. "வரம் எனும் அயில்வேல்
--- இப்பொழுது அகன்றது. குலப்பூண் --- ஆரம் ஆம் காந்தமாமணி இன்று
வாங்க" எனும் தசரதன் மொழியைக் காண்க (கம்ப. 10068) கொண்டல் ஊழி -
ஓர் ஊழி போலும் - பரிபாடல் கொண்டும், புராண வழக்குக் கொண்டும்
ஆய்தல் வேண்டும். 'இரு நிறத்துற்ற வெற்கு இயைந்த காந்தத்தை' என்ற
சுவடிப்பாடம் கொண்டு முன்னுள்ளோர் பலரும் உரை தடுமாறினர் - 'வேற்கு'
எனச் சுவடி எழுத்தின் உண்மைகாட்டி உரை கண்டார் வாகீசகலாநிதி. கி.வா.
ஜகந்நாதன் அவர்கள்.                                        (63)