5134.

'மூவகை உலகையும் முறையின் நீக்கிய
பாவி தன் உயிர்கொள்வான் இழைத்த பண்பு
                                  இதால்;
ஆவதே;
அரவணைத் துயிலின் நீங்கிய
தேவனே அவன்;இவள் கமலச்செல்வியே.

     இது - பிராட்டி சிறையிலிருக்கும் கொடுமை; மூவகை உலகையும் -
மூன்று வகைப்பட்ட உலகங்களையும்; முறையின் நீக்கிய -
நன்னெறியிலிருந்து பிறழச் செய்த; பாவி தன் - பாவியாகிய இராவணனுடைய;
உயிர் கொள்வான் -
உயிரைக் கவர்வதற்காகத் (திருமால்); இழைத்த -
செய்த; பண்பு - செயலாகும்; ஆவதே -  இது பொருந்துவதாகுமே?;
அவன் -
இந்த இராமபிரான்; அரவணைத்துயிலின் நீங்கிய - பாம்புப்
படுக்கையில் மேற்கொண்ட உறக்கத்தை விட்டு வந்த; தேவனே - திருமாலே;
இவள் - இந்தப் பிராட்டி; கமலச் செல்வியே - தாமரை மலரில் வீற்றிருக்கும்திருமகளே.

    பாவி தன் உயிர்கொள்வான் இழைத்த பண்பு - என்பதற்கு இராவணன்
தன்னுடைய உயிரைத் திருமால் அழிப்பதற்கு (அவனே) செய்த செயல்
என்றும், விதி இராவணனை அழிக்க மேற்கொண்ட செயல் என்றும், பிராட்டி
(தேவ மகளிரைச் சிறைமீட்க) இராவணனை அழிக்க மேற்கொண்ட செயல்
என்றும் பலபடியாகக் கூறுவர்.                                  (66)