சீதையின் தூய்மையைஅனுமன் வியத்தல்

5136.

'மாசுண்டமணி அனாள், வயங்கு வெங் கதிர்த்
தேசுண்டதிங்களும் என்னத் தேய்ந்துளாள்;
காசுண்டகூந்தலாள் கற்பும், காதலும்
ஏசுண்டதுஇல்லையால்; அறத்துக்கு ஈறு உண்டோ ?

(அனுமன்)

     மாசுண்ட மணிஅனாள் - அழுக்கால் மூடப்பெற்ற மணி போன்றவள்;
வயங்கு - விளக்கமான; வெங்கதிர் - கொடுமையான சூரியனின்; தேசுண்ட -ஒளியால் மறைக்கப் பெற்ற; திங்கள் என்ன - சந்திரனைப் போல;
தேய்ந்துளாள் - (ஒளி) குன்றியுள்ளாள்; காசுண்ட கூந்தலாள் - அழுக்குப்
படிந்த கூந்தலையுடைய பிராட்டியின்; கற்பும் - உறுதிப்பாடும்; காதலும் -
இராமன்பால் கொண்ட காதலும்; ஏசு உண்டது இல்லை -
தாழ்ச்சியடையவில்லை; அறத்திற்கு(ம்) ஈறுண்டோ ? - தருமத்திற்கும் அழிவுவருமா.

    சீதையின் கற்புமுதலானவை தாழ்ச்சியுறவி்ல்லை என்னும்
சிறப்புக்கருத்தை தருமத்துக்கு ஈறுண்டோ என்னும் பொதுக் கருத்தால்
உறுதிப்படுத்தலின் இது வேற்றுப் பொருள் வைப்பணி. விழுமணி மாசு மூழ்கிக்
கிடந்தது என்பர் தேவர் (சிந்தா)                                (68)