5140. | 'வெங் கனல் முழுகியும், புலன்கள் வீக்கியும், நுங்குவ, அருந்துவ, நீக்கி, நோற்பவர் எங்கு உளர்?-குலத்தில் வந்து, இல்லின் மாண்புடை நங்கையர் மனத்தவம் நவிலற்பாலதோ ? |
குலத்தின் வந்து- நல்லகுலத்திலே பிறந்து; இல்லின் மாண்புடை - இல்லறச் சிறப்பைப்பெற்ற; நங்கையர் மனத்தவம் - பெண்கள் மனத்தால் செய்யும் தவமானது; நவிலற் பாலதோ - நம்மால் கூறத்தக்க எளிமையானதா. (இம்மங்கையர்களுக்கு முன்); வெங்கனல் முழுகியும் - கொடிய (ஐந்துவித) நெருப்பில் குளித்தும்; புலன்கள் வீக்கியும் - (ஓடும்) ஐந்து புலன்களைக் கட்டியும்; நுங்குவ அருந்துவ - உண்ணும் உணவையும் பருகும் புனலையும்; நீக்கி - ஒதுக்கிவிட்டு; நோற்பவர் - தவம் செய்பவர்கள்; எங்குளர் -எங்கேஇருக்கிறார்கள். கற்பு மகளிர்க்குமுனிவர்கள் ஒப்பாகார் என்க. எங்கே என்பது ஏற்றத் தாழ்வை உணர்த்தும் உலகச் சொல் 'அவன் எவரிடத்தான் யார் யார்' என்னும் ஆழ்வார் பாசுரம் கருதுக (5-1-7) நங்கையர் என்றது பிராட்டியை. (72) |