5147. | உருப்பசிஉடைவாள் எடுத்தனள் தொடர, மேனகைவெள்ளடை உதவ, செருப்பினைத்தாங்கித் திலோத்தமை செல்ல, அரம்பையர்குழாம் புடை சுற்ற, கருப்புரச்சாந்தும், கலவையும், மலரும், கலந்துஉமி்ழ் பரிமளகந்தம், மருப்புடைப்பொருப்பு ஏர் மாதிரக் களிற்றின் வரிக் கைவாய் மூக்கிடை மடுப்ப; |
உருப்பசி -ஊர்வசியானவள்; உடைவாள் எடுத்தனள் - உடைவாளைஎடுத்துக் கொண்டு; தொடர - பின்னே வரவும்; மேனகை - மேனகையானவள்; வெள்ளடை - வெற்றிலையை; உதவ - (பக்கத்திலிருந்து) வழங்கவும்; திலோத்தமை - திலோத்தமையானவள்; செருப்பினைத் தாங்கி -செருப்பைச் சுமந்தபடி; செல்ல - (ஒருபக்கம்) போகவும்; அரம்பையர் குழாம்- (பிற) தேவ மகளிரின்கூட்டம்; புடை சுற்ற - பக்கங்களில் சூழ்ந்து வரவும்;(மேனியைச் சார்ந்த) கருப்புரச் சாந்தும் - கர்ப்பூரம் கலந்த சந்தனமும்;கலவையும் - குங்குமம் முதலியவற்றின் சாந்தும்; மலரும் - பலவகைப்பூக்களும்; கலந்து - ஒன்று சேர்ந்து; உமிழ் பரிமள கந்தம் - வெளிப்படுத்தும் நறுமணமானது; மருப்புடை - கொம்பைப் பெற்ற; பொருப்புஏர் - மலைகளை ஒத்த; மாதிரக் களிற்றின் - திக்குயானைகளின்; வரி கை வாய் மூக்கிடை - கோடுகளைப் பெற்ற கையிலே வாய்க்கப் பெற்ற மூக்கின் கண்ணே; மடுப்ப - கலக்கவும். 79 பாடல் முதல்96 பாடல்கள் வரை உள்ள மடுப்ப, அவிந்திருப்ப முதலான செய என் எச்சங்கள் 96-பாடலில் உள்ள உலாவி என்னும் செய்து என்னும் வாய்பாட்டை அவாவ, அஃது எய்துகின்றானை என்னும் வினையாலணையும் பெயரின் பகுதியுடன் நிறைவு பெறுகிறது. உலாவி என்பது வினை எச்சமாதலின் பெயர் கொண்டு முடியா, ஆதலின் எய்துகின்ற என்னும் பகுதியுடன் முடிந்தது என்க. இராவணன் மேனியின்கண் மணப்பொருளின் வாசனைபேசப்பெற்றது. கைவாய் மூக்கு - கையிலேஅமைந்த மூக்கு. அப்பர், யானையின் கையே மூக்காக அமைந்ததை நோக்கிநெடுமூக்கிற் கரியினுரி (தேவாரம் 310 -8) குமரகுருபரர், தடக்கை நாசிஎன்பார் (மீனாட்சி பிள்ளைத் தமிழ் 8) வெள்ளடை - வெற்றிலை -வெள்ளடைத் தம்பல் (கம்ப.4176) உலகில் உள்ள மணங்களைத் திக்குயானைகள் அனுபவித்தன. தகரக் குழலின் நறையும், நறைதரு தீம்புகையும்திசைக்களிற்றின் தடக்கை நாசிப் புழை மடுப்ப என்பது குமரகுருபரர் அமுதத்தமிழ் (மீனாட்சி - தமிழ் 61) கலவை - குங்குமம் முதலியவற்றின் கலவை.குங்குமக் கலவையை 'மனாலக் கலவை' என்று பதிற்றுப் பத்து பேசும் (பதிற்று11,10) இராவணன் தன் செல்வச் செருக்கு வெளிப்படத் தேவ மகளிரைஏவலர்கள் ஆக்கி வந்தனன். பிராட்டி மயங்காது வென்றாள். உலகச் சிறப்பைவெறுத்தவளே இறைவனுக்கு ஏற்றவள் என்பது பாவிகம். (79) |