5149. | 'அந்தரம் புகுந்தது உண்டு என, முனிவுற்று, அருந் துயில் நீங்கினான்; ஆண்டைச் சந்திர வதனத்து அருந்ததி இருந்த தண் நறுஞ் சோலையின் தனையோ ? வந்தது இங்கு யாதோ ? யாரொடும் போமா ?' என்று, தம் மனம் மறுகுதலால், இந்திரன் முதலோர், இமைப்பிலா நாட்டத்து எனைவரும், உயிர்ப்பு அவிந்திருப்ப; |
இமைப்பு இலா -இமைத்தல் இல்லாத; நாட்டத்து - கண்களையுடைய; இந்திரன் முதலோர் - இந்திரன் முதலான; எனைவரும் - எல்லாத் தேவர்களும்; (இராவணன்) அந்தரம் - தீங்கானது; புகுந்தது உண்டு - புகுந்துள்ளது; என - என்று கருதி; முனிவுற்று - சீற்றங் கொண்டு; அருந்துயில் - சிறந்த உறக்கத்தை; நீங்கினான் - நீங்கப் பெற்றான்; இங்கு -இந்த இலங்கையில்; வந்தது யாதோ - வந்த துன்பம் எதுவோ; (இவன் சீற்றம்) ஆண்டை - அங்கே; சந்திர வதனத்து - சந்திரன் போன்ற முகத்தையுடைய; அருந்ததி இருந்த - அருந்ததி யொத்த பிராட்டி தங்கிய; தண் நறுஞ் சோலையின் தனையோ - குளிர்ந்த மணமுள்ள சோலையின் அளவில் அமைவதா? அன்றி; யாரொடும் - எவரை அழிப்பதுடன்; போமா - நீங்குமோ; என்று - என்று கருதி; தம் மனம் மறுகுதலால் - தம் உள்ளம் துன்பத்தில் கலங்குதலால்; உயிர்ப்பு அவிந்து - மூச்சு அடங்கி; இருப்ப - (ஒடுங்கி) இருக்கவும். 'புகுந்தது' என்னும் முற்று, புகுந்து எனும் எச்சப்பொருள் தந்தது. வினைமுற்று வினைஎச்சம் ஆதல் விதி. முதலோர் என்னும் குறிப்பு வினைமுற்றுபெயரெச்சப்பொருளில் வந்தது. குறிப்பு முற்று ஈரெச்சம் ஆதல் விதி. சோலையின் தனையோ என்பதில் உள்ள 'தனை' என்பது 'அளவு' என்னும் பொருள்தரும் சொல். இத்தனை, அத்தனை என்னும் வழக்கினை அறிக. அத்தனையும் வேண்டும் அவர்க்கு என்று தனிப்பாடல் பேசும் (இரட்டையர்) 'எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ" (கம்ப, 623) என்பன் கம்பன். எவர், ஏவர் என்றாகி அது யாவர் என்று மாறி யார் என வந்தது. இராவணன் சீற்றம் பகைவரை அழித்தபின் ஒழியும். இச்சீற்றம் எவரை அழித்தபின் நீங்குமோ என்று தேவர்கள் எண்ணினர். (81) |