5154. | பயில்எயிற்று இரட்டைப் பணை மருப்பு ஒடிய, படியினில்பரிபவம் சுமந்த மயில் அடித்துஒழுக்கின் அனைய மா மதத்த மாதிரக்காவல் மால் யானை, கயிலையின்திரண்ட முரண் தொடர் தடந் தோள் கனகனதுஉயர் வரம் கடந்த அயில் எயிற்றுஅரியின் சுவடு தன் கரத்தால் அளைந்தமாக் கரியின், நின்று அஞ்ச; |
எயிற்று பயில் -பற்களின்பக்கத்தே செறிந்துள்ள; இரட்டைப் பணை மருப்பு - இரட்டித்த பருத்த கொம்புகள்; ஒடிய - ஒடிந்தமையாலே; படியினில் பரிபவம் சுமந்த - உலகில் அவமானத்தைத் தாங்கியுள்ள; மயில் அடித்து - மயிலின் அடியின் தன்மையை; அனைய - ஒத்த; ஒழுக்கு மா மதத்த - ஒழுகுதலைப் பெற்ற மதத்தை உடைய; மாதிரக் காவல் - திசைகளைப் பாதுகாக்கும்; மால் யானை - பெரிய யானைகள்; கயிலையின் - கயிலாய மலைபோல; திரண்ட - ஒன்று கூடியதும்; தொடர் முரண் - இடைவிடாத வலிமையுடையதும்; தடந்தோள் - வலிமை மிக்க தோள்களையுடைய; கனகனது - இரணியனுடைய; உயர் வரம் கடந்த - உயர்ந்த வரங்களை வென்ற; அயில் எயிற்று - கூரிய பற்களையுடைய; அரியின் சுவடு - நரசிங்கத்தின் பாதச் சுவட்டை; தன்கரத்தால் - தன்னுடைய கையால்; அளைந்த - தடவிப் பார்த்த; மாக்கரியின் - பெரிய யானையைப் போல; நின்று - திகைத்து; அஞ்ச - பயத்தை அடையவும். நான்குதந்தங்கள் திசையானை மாட்டு உளவாதலின் இரட்டைப் பணை மருப்பு என்று கூறப் பெற்றது. மற்றைய யானைகளுக்கு இரட்டித்த கொம்பு என்க. பயில் - செறிந்த. மரம்பயில் கடிமிளை (புறம் 21) மயில் அடித்து - மயிலடியின் தன்மை. அடி என்றது விரலை. மயிலடி மூன்று. மதமும் மூன்று. ஆதலின் மயிலடித்து --- மாமதம் என்று கூறப் பெற்றது, பரிபவம் சுமந்த யானை என்க. திரண்ட அரி - கடந்த அரி என்க. தடந்தோள் அரிக்கு உரித்து. அரி - நரசிங்கம். அரி உருவாகி (பெரியாழ் திருப்பல்லாண்டு) (86) |