4867. | விளரிச் சொல்லியர் வாயினால் வேலையுள்மிடைந்த பவளக் காடுஎனப்பொலிந்தது; படைநெடுங்கண்ணால், குவளைக்கோட்டகம் கடுத்தது; குளிர்முகக்குழுவால் முளரிக் கானமும்ஒத்தது- முழங்குநீர்இலங்கை. |
முழங்குநீர்இலங்கை - ஒலிக்கும் கடலால்சூழப்பெற்ற இலங்கை; விளரிச் சொல்லியர் - விளரிப்பண் போன்ற மொழி பேசும் அரக்கியர்களின்; வாயினால் - (சிவந்த) வாயினால்; வேலையுள் மிடைந்த - கடலில் நெருங்கிக்கிடக்கும்; பவளக் காடு எனப்பொலிந்தது - பவளக்காடுபோல் விளங்கிற்று; படைநெடுங்கண்ணால் - (அரக்கியரின்) வேல்போன்ற கண்களால்; (இலங்கை) குவளைக் கோட்டகம் கடுத்தது - குவளைப் பூக்கள் மலர்ந்த பொய்கையை ஒத்திருந்தது; குளிர்முகக் குழுவால் - (அரக்கியரின்) குளிர்ந்த முகங்களின் கூட்டத்தால்; முளரிக்கானமும் ஒத்தது - தாமரைக் காட்டையும் போன்றது. கோட்டகம் -பொய்கை. வாயினால் என்பதை 'ஓதியால்' என்று பாடம் கொண்டு சிவந்த கூந்தலால் பவளக்காடு போலும் எனப் பொருள் கூறலும் ஒன்று. (33) |