5159.

அந்தியில், அநங்கன், அழல்படத் துரந்த
     அயில்முகப் பகழி வாய் அறுத்த
வெந்துறு புண்ணின்வேல் நுழைந்தென்ன,
     வெண்மதிப் பசுங் கதிர் விரவ,
மந்த மாருதம்போய் மலர்தொறும் வாரி
     வயங்குநீர் மம்மரின் வரு தேன்
சிந்து நுண்துளியின் சீகரத் திவலை,
     உருக்கியசெம்பு எனத் தெறிப்ப;

     அந்தியில் -மாலைக்காலத்தில்; அனங்கன் - மன்மதன்; அழல்
படத் துரந்த -
வெப்பம் உண்டாக ஏவிய; அயில் முகப் பகழி - கூரிய
முகத்தைப் பெற்ற அம்பு; வாய் அறுத்த - தப்பாமல் அறுத்த; வெந்துறு
புண்ணின் -
வெந்துள்ள புண்ணிலே; வேல் நுழைந்தென்ன - வேல்
புகுந்தாற் போல; வெண்மதி - வெண்மையான சந்திரனின்; பசுங்கதிர் விரவ
-
இளங்கதிர் கலக்கவும்; மந்த மாருதம் - தென்றக் காற்று; மலர்தொறும்
போய் -
பூக்கள் தோறும் சென்று; வாரி - அள்ளிக் கொண்டு; வயங்கு நீர்
மம்மரின் -
விளங்கும் மழைபோலப் பெருகி; வரு - வருகின்ற; சிந்து நுண்
-
சிந்துகின்ற நுட்பமான; தேன் துளிகள் - தேன் துளிகளும்; சீகரத் திவலை- செழிப்பான நீர்த்துளிகளும்; உருக்கிய - உருக்கப்பெற்ற; செம்பு
என -
செம்பின் குழம்பு போல; தெறிப்ப - மேனியில் படவும்.

     சீகரம் -செழிப்பு. "சீகரம் மிக்க சூர் செயிர்த்துச் செய்திடும் ஆகுலம்"
(கந்தபுரா - மகேந்தர - சயந்தன் புலம்பு 20) சீகரத் திவலை - பனிநீர்ச்
செம்பில் நின்று தூவும் நீர்த்துளிகள் என்று அண்ணாமலை - கழகப் பதிப்பு
வரைந்தது. சீகரம், பன்னீர்ச் செம்பு என்பதற்கு மேற்கோள்
காட்டப்படவி்ல்லை; வி.கோவிந்தப் பிள்ளை இங்ஙனம் உரை கூற
வழிகாட்டினார்.                                          (91)