5160. | இழை புரைமருங்குல் இறும் இறும் எனவும், இறுகலா வனமுலை இரட்டை உழை புகுசெப்பின் ஒளிதர மறைத்த உத்தரியத்தினர் ஒல்கி குழை புகு கமலம்கோட்டினர் நோக்கும், குறு நகைக்குமுத வாய் மகளிர் மழை புரை ஒண்கண் செங் கடை ஈட்டம், மார்பினும்தோளினும், மலைய; |
இழை புரைமருங்குல் - நூல் போன்ற இடை;இறும் இறும் எனவும் - முறியும் முறியும் என உணர்த்தவும்; இறுகலா - சுருங்காத; இரட்டை வனமுலை - இரட்டித்த அழகிய தனங்கள்; உழைபுகு - இரு பக்கங்களிலும்; செப்பின் - புகுந்த செப்புகளைப் போல; ஒளிதர - விளக்கமுற; மறைத்த - அவற்றை மறைக்கின்ற; உத்தரியத்தினர் - மேலாடை உடையவர்களாய்; ஒல்கி - அசைந்து; குழைபுகு - குண்டலங்கள் பொருந்திய; கமலம் - தாமரை போலும் முகத்தை; கோட்டினர் - வளைத்து; நோக்கும் - பார்க்கும்; குறுநகை -புன்னகையும்; குமுதவாய் மகளிர் குமுத மலர் போன்றவாயையும் உடைய பெண்களின்; மழைபுரை -மேகத்தைப் போன்றதும்; செங்கடை - சிவந்த கடைப்பகுதிகளைக்கொண்டதும் (ஆகிய); ஒண்கண் - அழகிய கண்களின்; ஈட்டம் - தொகுதி;மார்பினும் - மார்பின்கண்ணும்; தோளினும் - தோள்களிலும்; மலைய -போர் செய்யவும். இறுகலா -சுருங்காத. இறுகல் உறப்பென்னும் ஞானிக்கும் (திருவாய் 4-1- 10) இறுகல் -சங்கோசம் (சுருங்கல்) திவ்யப் பிரபந்தம் அரும்பதவுரை 786 (பக்) திருவேங்கடத்தான் மன்றம். உழை - இருபுறம். மேகம் போலும் கண் என்று கூறுவதில் கவிச்சக்கரவர்த்திக்கு விருப்பம் அதிகம் போலும். "மழைபொரு கண்ணினை மடந்தை மார்" (கம்ப. 573)"மழைக்கண் என்பது காரணக்குறி" (கம்ப. 5074) புரைமழைக்கண் எனப் பிரித்து உயர்ந்த குளிர்ந்த கண் என்றும் கூறலாம்.மழைக்கண் - குளிர்ந்த கண் என்பதே சங்க வழக்கு. பூங்குழைக்கு அமர்ந்தஏந்தெழில் மழைக்கண் (நெடுதல் 38) (92) |